சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகள் செல்ல அனுமதி.. சென்னை ஐகோர்ட் உத்தரவு!
Madras High Court : தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நான்கு சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் 2025 ஜூலை 31ஆம் தேதி வரை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. பிரச்சனைக்கு தீர்வு காண சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வழக்கறிஞர் கூறியதை அடுத்து, உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.

சென்னை, ஜூலை 10 : தென் மாவட்டங்களுக்கு செல்லும் நான்கு சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை (TNSTC Buses) அனுமதிக்க கூடாது என்ற உத்தரவை 2025 ஜூலை 31 ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) நிறுத்திவைத்துள்ளது. இதன் மூலம், சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை – கன்னியாகுமரி, கன்னியாகுமரி – எட்டூர்வட்டம், சாலைப்புதூர் – மதுரை, நாங்குநேரி – கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களில் உள்ள கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்கியதற்காக சுங்கக் கட்டணத்தை செலுத்தாததாக தெரிகிறது. இதனை அடுத்து, இந்த நான்கு சுங்கச்சாவடிகளை பராமரிக்கும் பராமரிக்கும் நான்கு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில் அரசு பேருந்துகளின் சுங்கக் கட்டண பாக்கி 276 கோடி ரூபாய் இன்னும் செலுத்தப்படாமல் இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுங்கக் கட்டண பாக்கி 276 கோடி ரூபாயை செலுத்தி, பிரச்னைக்கு தீர்வு காண மாநில போக்குவரத்துத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நான்கு சுங்கச் சாவடிகள் வழியாக 2025 ஜூலை 10ம் தேதி முதல் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
Also Read : சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது.. உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை..




சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகள் செல்ல அனுமதி
இதனை அடுத்து, வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜராகி முறையிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதாக ஒப்புக் கொண்டார்.
இதனை அடுத்து, இந்த வழக்கு 2025 ஜூலை 10ஆம் தேதியான இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், பிரச்சனைக்கு தீர்வு காண சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுடன் போக்குவரத்து துறை செயலாளர் பேச்சு நடத்தி வருவதாகவும், விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் எனவும் தெரிவித்தார்.
Also Read : இனி ஒரு வெடி விபத்துக்கூட நடக்கக்கூடாது.. அறிக்கை சமர்பிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை இயக்க அனுமதிக்க கூடாது என்ற உத்தரவை 2025 ஜூலை 31 ஆம் தேதி வரைக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இதன் மூலம், நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகள் 2025 ஜூலை 31ஆம் தேதி வரை இயக்க முடியும். கட்டணம் செலுத்தும் பட்சத்தில், நீதிமன்றம் நிரந்தராமாக இயக்க உத்தரவிடும் என சொல்லப்படுகிறது.