இனி ஒரு வெடி விபத்துக்கூட நடக்கக்கூடாது.. அறிக்கை சமர்பிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..
National Green Tribunal: விருதுநகர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு மேற்கொண்டு 10 நாட்களில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், விதிமீறல் இருந்தால் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், ஜூலை 10, 2025: இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட விபத்து நடக்கக்கூடாது எனவும் விருதுநகரில் இருக்கக்கூடிய அனைத்து பட்டாசு ஆலைகளையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய வெடிப்பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பத்து நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் கீழ்தாயில்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.
தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம்:
விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அவல நிலை நீடித்து வருகிறது. இது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கோர்லபாடி அமர்வு தாமாக முன்வந்து வழக்காக விசாரணக்கு எடுத்தது. இந்த வழக்கு விசாரணையில் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தரப்பில் சரமாரியாக கேள்விகள் முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக பட்டாசு ஆலைகளில் முறையான விதிகள் பின்பற்றப்படுகிறதா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பது தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதே சமயம் தேசிய வெடிப்பொருள் பாதுகாப்புத் துறை தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் வெடி பொருள் தயாரிக்க உரிமம் பெற்ற ஆலைகளில் சிலர் தவறாக பயன்படுத்துவதாகவும், அனுமதி இல்லாத பிளாஸ்டிக் பந்துகள் மற்றும் இரும்பை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஆய்வு செய்து 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவு:
மேலும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தடையில்லா சான்றிதழை வழங்குவதற்கு முன்பு வெடி பொருள் தயாரிக்கும் கிடங்கில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறல்கள் ஏதும் நடந்துள்ளதா என ஆய்வு மேற்கொண்டு, விதிமீறல் நடந்திருந்தால் அந்த ஆலையை மூடுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் தேசிய தசமை தீர்ப்பாயம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தேசிய வெடி பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இணைந்து பத்து நாட்களுக்குள் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஆலைகளிலும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு இந்த வழக்கை ஜூலை 22, 2025 அன்றைக்கு ஒத்திவைத்துள்ளது