சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து.. ஒருவர் உயிரிழப்பு..
Sattur Fire Cracker Factory Explosion: சாத்தூர் அருகே இருக்கும் கீழதாயில்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார், மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதுக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர், ஜூலை 6, 2025: விருதுநகர் மாவட்டம் அருகே சாத்தூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கக்கூடிய கீழதாயில்பட்டியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது. வழக்கமாக காலை முதல் மாலை வரை தொழிலாளர்கள் இந்த பட்டாசு ஆலையில் பணியில் ஈடுபடுவார்கள். இந்த நிலையில் இன்று அதாவது ஜூலை 6 2025 தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குறைந்த அளவிலான தொழிலாளர்கள் மட்டுமே ஆலைக்கு வருகை தந்துள்ளன. அவர்கள் வழக்கம் போல் பணியை மேற்கொண்டுள்ளனர்.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து:
அப்போது ஒரு அறையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதன் காரணமாக அந்த தீ மளமளவென பரவி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது ஒரு அறையில் ஏற்பட்ட தீயானது பட்டாசுகள் வெடிக்க தொடங்கியவுடன் வேறு வேறு அறைகளுக்கு பரவத் தொடங்கியது. கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட அறைகளில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஒருவர் உயிரிழப்பு:
இந்த தீ விபத்தை தொடர்ந்து அப்பகுதி முழுவதுமே புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளது. பட்டாசுகள் வெடித்த சிதறி தீ விபத்து ஏற்பட்ட உடனே அருகில் இருக்கக்கூடிய தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த பயங்கர தீ விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நான்கு பேருக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பேரும் உடனடியாக அப்பகுதியில் இருந்து மீட்டு அருகில் இருக்கக்கூடிய சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் தீயணைப்பு துறையினரோடு காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடரும் பட்டாசு ஆலை வெடி விபத்துக்கள்:
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆலை உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து நடந்து வருவது ஒரு வழக்கமான செயலாக மாறியுள்ளது. அந்த வகையில் 2025 ஜூலை 1ஆம் தேதி சாத்தூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட ஆறைகள் தரைமட்டமானது. இந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் உடல் கருகி வெடித்து சிதறி உயிரிழந்த சோகம் ஏற்பட்டது. பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சூழலில் ஜூலை 6 2025 தேதி இன்று மீண்டும் ஒரு வெடி விபத்து நிகழ்ந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.