90ஸ் கிட்ஸ்களின் மீட்பர் யுவன் சங்கர் ராஜாவிற்கு ஹேப்பி பர்த்டே!
HBD Yuvan Shankar Raja: இசைஞானி இளையராஜாவின் மகனாக சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆன யுவன் சங்கர் ராஜா இந்த துறையில் தனக்கான அங்கீகாரத்தை மிகவும் அழகாக உருவாக்கி கொண்டார். அப்பா ராஜாவின் இசைக்கு மயங்கியவர்கள் மகன் யுவனின் இசைக்கு மயங்காமல் இல்லை.

இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகனாக கடந்த 1997-ம் ஆண்டு வெளியான அரவிந்தன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja). தொடர்ந்து 1999-ம் ஆண்டு இவரது இசையில் வெளியான பாடல்கள் ஹிட் அடித்தாலும் யுவன் குறித்து யாருக்கும் சரியான பரிச்சையம் இல்லாமலே இருந்தது. பாடல்கள் ஹிட் அடித்துக்கொண்டிருந்த நேரத்திலே யுவனின் இசைக்கு பல எதிர்மறையான விமர்சனங்களும் இருந்து வந்ததாக யுவன் சங்கர் ராஜா முன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2001-ம் ஆண்டு நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அந்தப் படத்தில் பணியாற்ற நடிகர் அஜித் தான் காரணம் என்றும் யுவன் சங்கர் ராஜா தெரிவித்து இருப்பார்.
அப்படி தொடங்கிய அந்த வெற்றி தொடர்ந்து 2025-ம் ஆண்டு வரை இறுதியாக வெளியான மாரீசன் படம் வரை சுமார் 25 ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றது. யுவனின் இசையில் மேஜிக் இருக்கிறது என்பது அவரது ரசிகர்களுக்கு தெரியும். குறிப்பாக 90களில் பிறந்தவர்களுக்கு அவர்களின் பால்ய காலத்தில் இருந்து தற்போது வரை யுவனின் இசை எப்படி அவர்களை அனைத்துக்கொள்கிறது என்பதை பலமுறை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து இருக்கின்றனர். இந்த மேஜிக் நிகழ யுவன் இசையுடன் நா முத்துகுமார் வரிகள் இணைந்தது என்றும் அவர்கள் கூறுவார்கள். பெரும்பாளும் யுவன் ரசிகர்களாக இருப்பவர்களுக்கு நிச்சயமாக நா முத்துகுமாரைப் பிடிக்கும். அதே போல நா முத்துகுமாரை பிடிக்கும் ரசிகர்களுக்கு நிச்சயமாக யுவனைப் பிடிக்கும். இவர்களின் காம்போவில் ஹிட் அடித்தப் பல நூறு பாடல்கள் தற்போது உள்ள 2கே கிட்ஸ்களின் காதுகளிலும் ஒளித்துக்கொண்டே இருக்கின்றது.




எதிர் பார்த்த எல்லாம் கைவிட்டு போக பொய் என்பதா மெய் என்பதா கை நீட்டி வந்தாய்:
வாழ்க்கையில் எல்லா விதமான தருணங்களிலும் தனது இசை என்ற கையினால் ரசிகர்களை இறுகப் பிடித்து வழி நடத்தியவர் யுவன் சங்கர் ராஜா. எதிர் பார்த்த எல்லாம் கைவிட்டு போக பொய் என்பதா மெய் என்பதா கை நீட்டி வந்தாய் என்ற நா முத்துகுமாரின் வரிகளைப் போல யுவன் சங்கர் ராஜா தனது இசையால் பலரது வாழ்வில் மீட்பராக இருக்கிறார்.
தற்போது உள்ள சமூகத்தில் மன நல பிரச்சனை என்பது மிகவும் சாதாரண விசயமாக மாறிவிட்டது. ஒரே ஸ்ட்ரெஸா இருக்கு என்று சொல்லாத ஆட்களே இல்லை என்பதுதான் நிதர்சனாமான உண்மை. அப்படி இருக்கும் நிலையில் 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையில் எல்லா தருணங்களிலும் யுவனின் இசை வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருவது போல கூடவே வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
காதல், காதல் தோழ்வி, நட்பு, பிரிவு, தந்தை பாசம், தாய் பாசம் என யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் இசையில் வெளியான பாடல்கள் மட்டும் இன்றி தீம் மியூசிக்கும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படி இசையில் சாம்ராஜியம் செய்யும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 46-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நமது டிவி 9 தமிழ் சார்பாக நாமும் சொல்வோம் ஹேப்பி பர்த்டே யுவன்!
Also Read… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியானது விஷாலின் மகுடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
யுவன் சங்கர் ராஜாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… எனக்கு ரௌடி ஆகனும்னு ஆசை இல்ல நான் படிக்கனும்… சுள்ளான் சேது டீசர் இதோ!