மு.க.அழகிரியின் மகள் கயல்விழி தவெகவில் இணைய தீவிர முயற்சி? அமைச்சர்களை சந்தித்த பின்னணி இதுவா?..
M.K.Alagiris daughter Kayalvizhi to join TVK: தவெக அரசின் முக்கிய அமைச்சரான செங்கோட்டையன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இச்சந்திப்பு 'மரியாதை நிமித்தமானது' என ஒரு தரப்பில் கூறப்பட்டாலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்தே த.வெ.க அமைச்சர்களை அவர் அணுகி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பேத்தியும், முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளுமான கயல்விழி, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக வெற்றி கழக அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது. கடந்த மே 10ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழாவில் கயல்விழி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக அரசை வாழ்த்தியதோடு, “முதலமைச்சர் விஜய் ஒரு சரித்திர சாதனையாளர், அவரது கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி இது” எனப் பாராட்டிப் பேசினார். இது திமுக வட்டாரத்திலும், அரசியல் தளத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க: “பவர் உங்கள் கையில்.. பவர் கட் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்”.. முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் கோரிக்கை!!
மதுரை மேயர் பதவிக்கு குறி?
இதனைத் தொடர்ந்து, கயல்விழி விரைவில் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணையப் போகிறார் என்றும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மேயர் பதவியைக் குறிவைத்து அவர் காய்களை நகர்த்தி வருகிறார் என்றும் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவல்களை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், மே 22 ஆம் தேதி காலை சென்னை தலைமைச் செயலகத்திற்கு திடீரென வந்த கயல்விழி, தவெக அரசின் முக்கிய அமைச்சரான செங்கோட்டையன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இச்சந்திப்பு ‘மரியாதை நிமித்தமானது’ என ஒரு தரப்பில் கூறப்பட்டாலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்தே த.வெ.க அமைச்சர்களை அவர் அணுகி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
திமுக தலைமை மீது பகிரங்க அதிருப்தி:
முன்னதாக, மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி இடையே நிலவும் குடும்ப அரசியல் மோதல்கள் காரணமாக, திமுக-வின் எந்தவொரு கட்சி நிகழ்வுகளுக்கும் தங்களை அழைப்பதில்லை என கயல்விழி தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதில் திமுக தலைமை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், “இராமனுக்கே 14 வருடங்கள் தான் வனவாசம், ஆனால் எங்கள் அப்பாவை (மு.க.அழகிரி) திமுக ஓரங்கட்டி 15 வருடங்கள் ஆகிவிட்டது. பெண்களிடம் சென்று ‘அண்ணன் நான் இருக்கிறேன்’ என மேடைகளில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார், ஆனால் சொந்த அண்ணனுக்கே அவர் பக்கபலமாக இல்லையே” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையும் படிக்க : திருச்செந்தூர் கோவிலில் கட்டண ரசீது வழங்கியதில் ரூ.25 லட்சம் முறைகேடு – நடந்தது என்ன?
இழந்த அரசியல் செல்வாக்கை மீட்க திட்டம்?
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் தங்களுக்குரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருக்கும் கயல்விழி, தற்போது தங்களின் சொந்த மண்ணான மதுரையிலும் தென் மாவட்டங்களிலும் இழந்த தங்களது அரசியல் செல்வாக்கை, விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றி கழகத்தின்’ மூலம் மீட்டெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.