AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாதம் ரூ.8,000 வட்டி ஆசைவார்த்தை.. திருப்பூரில் ரூ.5.5 கோடி சுருட்டிய தம்பதி.. சொந்த குடும்பமும் ஏமாந்த அதிர்ச்சி!!

இவர்களின் பேச்சை நம்பி முதலில் ரூ.50,000, ரூ.1 லட்சம் எனப் பொதுமக்கள் கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் இரண்டு மாதங்கள் வட்டிப் பணமாக தலா ரூ.8,000 கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் ஈர்க்கப்பட்ட பொதுமக்கள், தங்களது வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்தும், நிலப் பத்திரங்களை கொடுத்தும் கூடுதல் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

மாதம் ரூ.8,000 வட்டி ஆசைவார்த்தை.. திருப்பூரில் ரூ.5.5 கோடி சுருட்டிய தம்பதி.. சொந்த குடும்பமும் ஏமாந்த அதிர்ச்சி!!
மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 Jun 2026 14:19 PM IST

திருப்பூர், ஜுன் 27: அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் சுமார் 5.5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த தம்பதியை திருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் தம்பதியினர் தங்களது சொந்த குடும்பத்தினரையே ஏமாற்றியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி ஜெயசுகன்யா. இவர் திருப்பூரில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பதாகக் கூறி, அக்கம் பக்கத்தினரிடமும் உறவினர்களிடமும் பழகியுள்ளார்.

மேலும் படிக்க: பெண் அமைச்சரின் நள்ளிரவு ரெய்டு.. “சீல்” உடைத்து இயங்கிய 2 ஆலைகள்.. கலகலத்துபோன உரிமையாளர்கள்!

லோன் எடுத்து தருவதாக ஆசைவார்த்தை:

தங்கள் நிறுவனம் மூலம் லோன் (கடன்) வாங்கித் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் இருந்து ஆவணங்களைப் பெற்றுள்ளார். அந்த ஆவணங்களை வைத்து தனியார் நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் பெயரிலேயே ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை லோன் எடுத்துள்ளார். பின்னர் அந்தப் பணத்தை வேறொரு நிறுவனத்தில் முதலீடு செய்தால், ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் 8,000 ரூபாய் வட்டி கிடைக்கும் என்றும், நீண்ட கால முதலீடாக வைக்கும் போது அந்தத் தொகை மூன்று மடங்காகத் திருப்பித் தரப்படும் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

நகைகளை அடகு வைத்து ஏமாந்த பொதுமக்கள்:

இவர்களின் பேச்சை நம்பி முதலில் ரூ.50,000, ரூ.1 லட்சம் எனப் பொதுமக்கள் கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் இரண்டு மாதங்கள் வட்டிப் பணமாக தலா ரூ.8,000 கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் ஈர்க்கப்பட்ட பொதுமக்கள், தங்களது வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்தும், நிலப் பத்திரங்களை கொடுத்தும் கூடுதல் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, வங்கி ஜப்தி செய்த ஒரு வீட்டை காட்டி, “2 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வீட்டை ரூ.90 லட்சத்திற்கு முடித்துத் தருகிறேன்” என்று கூறி ஒரு பெண்ணிடம் மட்டும் சுமார் ரூ.70 லட்சம் வரை பெற்று ஏமாற்றியுள்ளனர். ஒட்டுமொத்தமாக 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து சுமார் ஐந்தரை கோடி ரூபாய் வரை இந்த தம்பதி சுருட்டியுள்ளது.

சொந்தக் குடும்பத்தையே விட்டுவைக்காத கொடுமை:

இந்த மோசடியில் தம்பதியினர் தங்களது சொந்தக் குடும்பத்தினரையும் விட்டுவைக்கவில்லை என்பதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் விஜயகுமாரின் உடன் பிறந்த தங்கையிடம், மூன்று மடங்காகத் தருவதாகக் கூறி ஜெயசுகன்யா ரூ.25 லட்சம் பெற்று ஏமாற்றியுள்ளார்.

இதுகுறித்து கண்ணீருடன் பேசிய பாதிக்கப்பட்ட தங்கை, “எனக்குத் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, குழந்தைக்கு உடல்நலக் குறைவு (Wheezing) உள்ளது. வேலைக்குப் போக வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி என் அண்ணியும் அண்ணனும் ஏமாற்றிவிட்டனர். என்னையும் ஏமாற்றிவிட்டு, எனது வயதான தாயிடமிருந்தும் 13 லட்சம் ரூபாயை அண்ணனே ஏமாற்றி வாங்கியுள்ளார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க: கல்யாண வீட்டில் ஸ்டாப்.. விருந்தில் பங்கேற்க சென்ற அரசு பேருந்து ஓட்டுநர்-நடத்துனர்.. பின்னாடியே வந்த ஆப்பு!

தம்பதி கைது – கமிஷனரிடம் மனு:

கடந்த இரண்டு வருடங்களாக இந்த மோசடி அரங்கேறி வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொதுமக்கள் தம்பதியின் வீட்டை முற்றுகையிட்டனர். ஆனால், பணத்தைத் திருப்பித் தருவது குறித்து ஜெயசுகன்யா எவ்வித பதிலும் கூறவில்லை.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கடந்த வாரம் விஜயகுமார் மற்றும் ஜெயசுகன்யா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து, தாங்கள் இழந்த பணத்தை மீட்டுத் தரக் கோரி கண்ணீர் மல்க மனு அளித்துள்ளனர்.

Follow Us