2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு? விஜய்க்கு எந்த இடம்? வெளியானது புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள்
Opinion Poll Results: 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் எனற கருத்து கணிப்பை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர் அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் குறித்தும், விஜய் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

எடப்பாடி - பழனிசாமி - விஜய்
சென்னை, ஜனவரி 3 : வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் (Assembly Election) யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பாக, லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பான ஐடிபிஐ அமைப்பு, தமிழ்நாடு முழுவதும் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளை, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு ஜனவரி 3, 2026 அன்று செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இந்த கருத்துக் கணிப்பு, இந்தியன் பொலிட்டிக்கல் டெமோக்ரடிக் ஸ்ட்ராடஜீஸ் அமைப்பின் 61வது கள ஆய்வாக நடத்தப்பட்டுள்ளது. இதில், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளுடன் முதல்வராகும் தலைவர் யார் என்ற கேள்விக்கு, 55 சதவீதம் பேர் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) என பதிலளித்துள்ளனர்.
விஜய்க்கு எந்த இடம்?
இந்த பட்டியலில் இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரண்டாவது இடத்தையும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா என்ற கேள்விக்கு, 25 சதவீதம் பேர் ஆம் என்றும், 17 சதவீதம் பேர் பகுதி அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், 47 சதவீதம் பேர் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு குறித்து கேட்டபோது, 37 சதவீதம் பேர் நன்றாக இருப்பதாகவும், 54 சதவீதம் பேர் திருப்தி அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். 39 சதவீதம் பேர் இது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் பதிலளித்துள்ளனர்.
இதையும் படிக்க : பல ஆண்டு கால போராட்டத்துக்கு முடிவு…மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…முதல்வரின் பொங்கல் பரிசு!
நடிகர் விஜய்யின் தாக்கம் எந்த கட்சிக்கு அதிகமாக இருக்கும் என்ற கேள்விக்கு, முதன்மையாக திமுக, அடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அதிமுக பாதிக்கப்படும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வளர்ச்சி அடைந்துள்ளதா என்ற கேள்விக்கு, 60 சதவீதம் பேர் இல்லை என பதிலளித்துள்ளனர்.
யாருக்கு வெற்றி?
விஜயின் அரசியல் நிலைப்பாடு குறித்து, 53 சதவீதம் பேர் சரியல்ல என்றும், 22 சதவீதம் பேர் நன்றாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இளம் வாக்காளர்களை ஈர்ப்பதில் விஜய் முதலிடத்தில் உள்ளதாகவும், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விஜய்யை, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அளவிற்கு மக்கள் தலைவராக பார்க்கிறார்களா என்ற கேள்விக்கு, 50 சதவீதம் பேர் இல்லை என பதிலளித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் எம்எல்ஏ ஆக வேண்டும் என 69 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : மீண்டும் மீண்டும் விஜய்யை கூட்டணிக்கு அழைக்கும் பாஜக.. இதுதான் வியூகம்?
2026 சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவக்கூடும் என்றும், இதனால் திமுக கூட்டணிக்கு மட்டுமே பலன் கிடைக்கும் என கூறுவது தவறானது என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஒரு வலுவான கூட்டணியை அமைத்துள்ளதாகவும், அதேபோல் தவெக கட்சி வலுவான கூட்டணியை அமைத்தால் இரண்டாவது இடத்தைப் பெற வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அதிமுகவும் இரண்டாவது இடத்திற்காக கடுமையாக போட்டியிடும் என்றும், நாம் தமிழர் கட்சி நான்காவது இடத்தை மட்டுமே பெறும் என்றும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.