மீண்டும் மீண்டும் விஜய்யை கூட்டணிக்கு அழைக்கும் பாஜக.. இதுதான் வியூகம்?
TN BJP invites Vijay to alliance: அதிமுக - பாஜக - தவெக என்ற வகையில் கூட்டணி உருவானால், திமுக எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் ஒரே திசையில் திரள்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். அதோடு, வாக்கு சிதறல் குறையும் என்றும் கூறப்படுகிறது.
பலமான அதிமுக – பாஜக கூட்டணிக்கு விஜய் வந்தால் நல்லது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக அரசியலில் தற்போது அதிகமாக பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக விஜய்யின் அரசியல் பயணம் உள்ளது. அவர் தனித்து போட்டியிடுவாரா அல்லது கூட்டணி அரசியலுக்குள் வருவாரா என்பதே அரசியலில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும், விஜய் தங்களது கூட்டணியில் இணைவதை உள்ளார்ந்த முறையில் எதிர்பார்ப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இதற்குப் பின்னால் பல அடுக்குகளாக காரணங்கள் உள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் விஜய்க்கு உள்ள ரசிகர்கள் கட்டமைப்பு சாதாரணமானது அல்ல. இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள் மத்தியில் விஜய்க்கு உள்ள ஈர்ப்பு, நேரடியாக வாக்குகளாக மாறக்கூடிய சக்தி கொண்டது எனக் அரசியல் விமர்சகள் கூறுகின்றனர்.
இதையும் படிக்க : மதிமுக அழைப்பிதழில் பிரபாகரன் படம் தான் காரணமா?..வைகோ நிகழ்ச்சியை புறக்கணித்த காங்கிரஸ்..
வாக்கு சிதறலை குறைக்க பாஜக வியூகம்:
பாஜக தமிழகத்தில் நீண்ட காலமாக இளைஞர் வாக்குகளை முழுமையாக ஈர்க்க முடியாமல் தவித்து வருகிறது. அதிமுகவோ, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த வாக்கு வங்கி சிதறி கிடக்கிறது. இந்த இடைவெளியை நிரப்பக்கூடிய ஒரே முகம் விஜய் என்பதால், இரு கட்சிகளும் அவரை முக்கிய அரசியல் வளமாகப் பார்க்கின்றன. திமுக தற்போது ஆட்சியில் இருந்தாலும், விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு குற்றச்சாட்டுகள் போன்ற காரணங்களால் மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான மனநிலை உருவாகி வருகிறது. ஆனால் அந்த எதிர்ப்பு வாக்குகள் பிளவுபட்டால், அது திமுகவுக்கே சாதகமாக முடியும். அதுவே, அதிமுக – பாஜக – தவெக என்ற வகையில் கூட்டணி உருவானால், திமுக எதிர்ப்பு வாக்குகள் ஒரே திசையில் திரள்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். அதோடு, வாக்கு சிதறல் குறையும் என்றும் கூறப்படுகிறது.




விஜய் தனித்து நிற்பதால் திமுகவுக்கே லாபம்:
அதேசமயம், விஜய் தனியாக அரசியல் களத்தில் இறங்கினால், அவர் பெறும் வாக்குகள் பெரும்பாலும் திமுக எதிர்ப்பு, அதிமுக பாரம்பரிய வாக்குளாகவும், இளைஞர்கள் வாக்குகளாகவும் இருக்கும். அதோடு, இதன் காரணமாக திமுகவுக்கு எதிரான வாக்குகள் பிரிந்து இறுதியில் திமுக மீண்டும் லாபம் அடையும் சூழல் உருவாகலாம். இதனை தவிர்க்கவே, விஜய் கூட்டணிக்குள் வந்தால் அனைவருக்கும் பயன் என்ற கணக்கில் பாஜக, அதிமுக தரப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அறிவாலயத்தின் அடிமைகளாக காங்கிரஸார்:
இதனிடையே, தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், திமுக கூட்டணிக்குள் குழப்பங்கள் ஆரம்பித்து விட்டன. காங்கிரஸ் கட்சியின் நிலை குறித்து ஜோதிமணி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் கடன் சுமை அதிகரித்து விட்டதாக காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார். ஆனால், கடனை வைத்து ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை மதிப்பிட முடியாது என ப.சிதம்பரம் கூறியுள்ளார். அந்த அளவுக்கு தமிழக காங்கிரஸார் அறிவாலயத்தின் அடிமைகளாக மாறிவிட்டனர் என்று விமர்சித்தார்.
மேலும் படிக்க: தமிழக காங்கிரஸ் அழிவுக்கு செல்வப்பெருந்தகையே சான்று…அண்ணாமலை நேரடி அட்டாக்!
கூட்டணிக்கு விஜய் வந்தால் நல்லது:
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக, பாஜக ஆகிய 2 கட்சிகளுமே அசுர சக்திகள். நாங்கள் அனுபவத்தில் பலமாக இருக்கிறோம். விஜய் பலமாக இருப்பதாக அனுமானத்தில் கூறிக் கொண்டிருக்கிறீர்கள். அனுபவத்தில் பலமாக இருப்பவர்களுடன், அனுமானத்தில் பலமாக இருப்பவர்கள் வந்தால் நல்லது. வரவில்லை என்றால் எங்களுக்கு எதுவும் பிரச்சினை கிடையாது என்று அவர் கூறினார்.