தொகுதி மறுவரையறையில் திமுக நிலைப்பாடு என்ன? ஸ்டாலின்- ராகுல் சந்திப்புக்கு நடுவே கனிமொழி கூறிய அந்த வார்த்தை!
DMK Stance On The Delimitation Bill : தொகுதி மறுவரையறை மசோதாவுடன் கூடிய மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்த முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தும் நிலையில், கனிமொழி கூறியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மக்களவையில் நாளை திங்கட்கிழமை மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறையுடன் இணைக்கப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வர உள்ளது. இந்த மசோதாவுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் நிபந்தனையுடன் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், திமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யக் கூறி அந்த கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர். இந்த நிலையில், டெல்லியில் இருந்து அவசரமாக சென்னை திரும்பிய திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக நிலைப்பாடு குறித்து கனிமொழி கூறிய விளக்கம்
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் ஏற்கனவே தனது முடிவை அறிவித்துவிட்டார். நேற்றைய தினம் நடைபெற்ற திமுக எம்பிக்கள் கூட்டத்தில் அவர் தனது நிலைப்பாட்டையும் தெரிவித்துள்ளார். எனவே, திமுகவின் ஒற்றை நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் தெளிவாக தெரிவித்துள்ளேன். இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் தலைவர்கள், திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசுவதற்காக சென்னை வந்துள்ளனர்.
மேலும் படிக்க: கடலூர் சிறையில் தவெக எம்எல்ஏ.. உயர் பாதுகாப்பு அறையில் அடைப்பு.. என்னென்ன நடைமுறைகள்!
அமித் ஷாவை சந்தித்த கனிமொழி எம்.பி.
அவர்கள், மு. க. ஸ்டாலினுடம் என்ன பேசப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்த்து அதன் பின்னர் அது தொடர்பான கருத்தை தெரிவிப்போம் இன்று கனிமொழி எம். பி. தெரிவித்தார். இதனிடையே, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்திருந்த கனிமொழி எம். பி. தொகுதி மறு வரையறை மசோதா தாக்கலுக்கு திமுக ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்திருந்தார். இதில், தமிழகத்துக்கான 7.1 சதவீத எம்பிக்கள் எண்ணிக்கை குறையக் கூடாது. தமிழகத்தின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்ட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
மு.க.ஸ்டாலினை சந்திக்க வந்த காங்கிரஸ் முக்கிய புள்ளிகள்
இந்த நிலையில் தான், திமுகவின் நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்யக் கோரி, மு. க. ஸ்டாலினை நேரில் சந்திப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இதில், மக்களவையில் 543 எம்பிக்கள் இருக்கும் நிலையில், தமிழகத்தில் 39 எம்பிக்கள் உள்ளனர். அதாவது, தமிழகத்தில் 7.1 சதவீத எம்பிக்கள் உள்ளனர். அண்டை மாநிலமான புதுச்சேரியில் 1 மக்களவை உறுப்பினர் என மொத்தம் 40 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தமிழகத்தில் புதிய நண்பர் இருக்கிறார்.. அவரை பார்க்க ராகுல் காந்தி வந்திருப்பார்.. உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!