சினிமா பாணியில் சம்பவம்! கண்டெய்னர் லாரியை திறந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்.. திருவள்ளூர் போலீசார் விசாரணை!
2 Container Lorries Seized : ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு உரிய அனுமதி இன்றி ஆற்று மணல் கடத்தி வந்த 2 கண்டெய்னர் லாரிகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில், தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர் .
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மணல் கடத்தி வந்த கண்டெய்னர் லாரிகளை திருவள்ளூர் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து கண்டெய்னர் லாரிகள் மூலமாக தமிழகத்துக்கு ஆற்று மணல் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை சிறப்பு பறக்கும் படை அதிகாரிகள் கும்மிடிப்பூண்டி அருகே தமிழக- ஆந்திர எல்லையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கவரப்பேட்டை நோக்கி சென்ற ஒரு கண்டெய்னர் லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்த முயற்சித்தனர். அப்போது, அந்த லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து, கண்டெய்னர் லாரியை அதிகாரிகள் சோதனை செய்ததில், உரிய அனுமதி இன்றி ஆற்று மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
கண்டெய்னர் லாரிகளில் ஆற்று மணல் கடத்தல்
இதே போல, அந்த வழியாக வந்த மற்றொரு கண்டெய்னர் லாரியை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், உரிய அனுமதி இல்லாமல் ஆற்று மணல் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. முன்னதாக, பறக்கும் படை அதிகாரிகள் லாரியை நிறுத்துவதை பார்த்த அதன் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. சினிமா பாணியில் கன்டெய்னர் லாரிகளில் ஆற்று மணல் கடத்தி வரப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கண்டெய்னர் லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து கவரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் படிக்க: கோவை நீதிமன்ற வளாகத்தில் வாலிபர் கொலை.. 5 மாதங்களுக்குப் பின் அலுவலக உதவியாளர்கள் 2 பேர் கைது!
ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்க போலீஸ் வலைவீச்சு
இது தொடர்பாக, கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆற்று மணல் கடத்தி கண்டெய்னர் லாரியின் உரிமையாளர் மற்றும் தப்பி ஓடிய ஓட்டுநர் ஆகியோர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இந்த மணல் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. இதற்குப் பின்னால் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பகுதியில் சட்டவிரோதமாக மலை மண் கடத்தி செல்லப்படுவதாக அந்தப் பகுதி வட்டாட்சியர் செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல்
அதன் அடிப்படையில், திருத்தணி வட்டாட்சியர் மற்றும் வருவாய் அதிகாரிகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில், 4 லாரிகள், டிராக்டர், ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதேபோல, பொன்னேரி அருகே சோழவரத்தில் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கடலூர் சிறையில் தவெக எம்எல்ஏ.. உயர் பாதுகாப்பு அறையில் அடைப்பு.. என்னென்ன நடைமுறைகள்!