AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கோவை நீதிமன்ற வளாகத்தில் வாலிபர் கொலை.. 5 மாதங்களுக்குப் பின் அலுவலக உதவியாளர்கள் 2 பேர் கைது!

Coimbatore court murder case: கோவை கோபாலபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வடமாநில வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 மாதங்களுக்குப் பிறகு நீதிமன்ற அலுவலக உதவியாளர்கள் 2 பேரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையைத் தொடர்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்ட இந்த வழக்கில் காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை நீதிமன்ற வளாகத்தில் வாலிபர் கொலை.. 5 மாதங்களுக்குப் பின் அலுவலக உதவியாளர்கள் 2 பேர் கைது!
கைதானவர்கள்
Sekaran S
Sekaran S | Published: 29 Nov 2026 14:17 PM IST

கோவை, நவ.29: கோவை கோபாலபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வடமாநில வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 மாதங்களுக்குப் பிறகு நீதிமன்ற அலுவலக உதவியாளர்கள் 2 பேரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடந்த ஜூன் 1-ஆம் தேதி காலை வழக்கம்போல் பணிக்கு வந்த ஊழியர்கள், நீதிமன்றத்தின் பின்பக்க வாசல் உள்புறத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் ரத்தக் காயங்களுடன் தரையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் அந்த வாலிபர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை உறுதி செய்த நிலையில், ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க: “அமித் ஷாவை சந்தித்தது ஏன்?”.. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளித்தது ஏன்?.. கனிமொழி கொடுத்த விளக்கம்! 

சிசிடிவி ஆய்வும் சந்தேக மரண வழக்கும்:

நீதிமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றிப் போலீசார் ஆய்வு செய்த போது, அன்று அதிகாலை கோபாலபுரம் வீதியில் நடந்து சென்ற அந்த வாலிபரை நாய் ஒன்று கடிக்கத் துரத்தியுள்ளது தெரியவந்தது. நாயிடமிருந்து தப்பிக்க அலறியடித்துக் கொண்டு ஓடிய அவர், நீதிமன்றத்தின் பின்பக்கக் காம்பவுண்ட் சுவரில் ஏறி உள்ளே குதித்தது காட்சிகளில் பதிவாகியிருந்தது. இதனால் இருட்டில் வேகமாக ஓடிய போது எதிர்பாராதவிதமாகக் கால் தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதிய போலீசார், முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். உயிரிழந்தவரின் சட்டைப் பையில் வெறும் 250 ரூபாய் மட்டுமே இருந்த நிலையில், தோற்றத்தை வைத்து அவர் வடமாநில வாலிபர் எனத் தெரியவந்தாலும் அடையாள அட்டைகளோ தங்குமிட விவரங்களோ உடனடியாகக் கிடைக்கவில்லை.

பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான திருப்பம்:

இதற்கிடையில் வடமாநில வாலிபரின் பிரேத பரிசோதனை அறிக்கையை மருத்துவர்கள் போலீசாரிடம் வழங்கினர். அந்த அறிக்கையில், வாலிபரின் நெற்றியில் இருந்த ரத்தக் காயம் கீழே விழுந்ததால் ஏற்பட்டதல்ல என்றும், அவரைக் கூர்மையான அல்லது கனமான பொருளால் அடித்ததில் ஏற்பட்ட காயம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்துச் சந்தேக மரணமாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கைக் கொலை வழக்காக மாற்றிய போலீசார், வாலிபர் தாக்கப்பட்ட பின் நீதிமன்ற வளாகத்தில் நுழைந்தாரா அல்லது வளாகத்திற்குள் தாக்கப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இதையும் படிக்க: தொகுதி மறுவரையறை.. உயரும் நாடாளுமன்ற எம்.பிக்களின் எண்ணிக்கை.. தமிழகத்திற்கு எவ்வளவு?

5 மாதங்களுக்குப் பின் இருவர் கைது:

தொடர்ந்து 5 மாதங்களாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், வடமாநில வாலிபரை அடித்துக் கொலை செய்தது நீதிமன்ற அலுவலக உதவியாளர்கள் என்பது தெரியவந்தது. புலியகுளத்தைச் சேர்ந்த நாகராஜ் (37) மற்றும் வீரப்பாண்டி அடுத்த பிரஸ் காலனியைச் சேர்ந்த சிரிஸ் அலெக்சாண்டர் (48) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். உயிரிழந்த வடமாநில வாலிபர் யார் என்பது குறித்தும், அலுவலக உதவியாளர்கள் எதற்காக அவரை அடித்துக் கொலை செய்தார்கள் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us