“அமித் ஷாவை சந்தித்தது ஏன்?”.. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளித்தது ஏன்?.. கனிமொழி கொடுத்த விளக்கம்!
Kanimozhi Explains Meeting With Amit Shah: திமுக எம்.பி.க்கள் கூட்டத் தீர்மானத்தின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் முடிவைத் தெரிவிக்க ஐந்து எம்.பி.க்கள் உள்துறை அமைச்சரைச் சந்தித்ததாகக் கனிமொழி தெரிவித்துள்ளார். 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் 50% இடங்கள் உயர்த்தப்படுவதால் தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 39-லிருந்து 59-ஆக உயரும் என விளக்கியுள்ளார்.
சென்னை, நவ.29: திமுக தலைவர் தலைமையில் நேற்று காலையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதாக முடிவெடுத்துள்ளதைத் தெரிவிக்கவே 5 திமுக எம்.பி.க்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக கனிமொழி தெரிவித்துள்ளார். புதிய மசோதா முழுத் திருப்தி அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தொகுதி மறுவரையறையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து யாரும் பேசாத 2024 பிப்ரவரியிலேயே திமுக ஆட்சியில் இருந்த போது சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதை நினைவுகூர்ந்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களால் மக்கள் தொகை குறைந்துள்ள நிலையில், தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் அணுகப்பட வேண்டும் என்பதற்காகவும் முதலில் தீர்மானம் நிறைவேற்றியது திமுகதான் என அவர் விளக்கியுள்ளார்.
இதையும் படிக்க : வெற்றிவேல் முருகனுக்கு… திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது! – விண்ணை முட்டிய பக்தர்கள் கோஷம்!
2025 மாநாடும் 1971 கணக்கெடுப்பும்:
2025-ஆம் ஆண்டில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஐந்து முதலமைச்சர்களை அழைத்துச் சென்னையில் நியாயமான தொகுதி மறுவரையறைக்கான மாநாடு நடத்தப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாடு தனது எம்.பி.க்களை இழந்துவிடக் கூடாது என்பதற்காகவும், 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் 25 ஆண்டுகளுக்கு முடக்கி வைத்து எல்லா மாநிலங்களுக்கும் சமமாக 50 சதவீதம் உயர்த்த வேண்டும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். முந்தைய மசோதாவில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் 50 சதவீத உயர்வு இல்லாமல் கொண்டு வரப்பட்டிருந்தால் தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 39-லிருந்து 32-ஆகக் குறைந்திருக்கும் எனவும், 50 சதவீத உயர்வு இருந்தாலும் 48 மட்டுமே வந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு 59 எம்.பி.க்கள், பாதிப்பு தடுப்பு:
தற்போது 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் எல்லா மாநிலங்களுக்கும் 50 சதவீதம் உயர்த்தித் தருகிறோம் என்ற திமுகவின் நிலைப்பாட்டை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டு மசோதாவைக் கொண்டு வந்துள்ளதாகவும், இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு 59 எம்.பி.க்கள் கிடைப்பதாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார். இது தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றிப் பாதிக்கப்படக்கூடிய அனைத்துத் தென்மாநிலங்களின் உரிமைகளையும் பெற்றுத் தந்துள்ள மகிழ்ச்சியான நிலை எனக் கூறிய அவர், இந்த ஆண்டுடன் முடக்கம் முடிவடையும் சூழலில் மசோதா காலாவதியானாலோ தோற்கடிக்கப்பட்டாலோ அடுத்த ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் சென்றால் தமிழ்நாடு மற்றும் தென்மாநிலங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், அதனைத் தடுக்கவே ஆதரிப்பதாகவும் விளக்கியுள்ளார்.
இதையும் படிக்க : தமிழகத்தில் பரவும் பறவை காய்ச்சல்.. கடலூரைத் தொடர்ந்து கோவையிலும் H5N1 வைரஸ் பாதிப்பு! பண்ணைகளில் கோழிகளை அழிக்கும் பணிகள் தீவிரம்..
நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்ற பதில்:
திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து மாறிவிட்டதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை மறுத்த கனிமொழி, முதல் நாள் முதல் இன்று வரை ஒரே நிலைப்பாட்டில்தான் திமுக உள்ளதாகவும், திமுக முன்வைத்த கருத்துகளை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டதாலேயே ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் நெருக்கடி நிலை வரையிலான பல்வேறு போராட்டங்கள் மற்றும் தியாகங்களைக் கடந்து வந்த திமுக, எந்தக் காலத்திலும் எதற்கும் பயந்ததில்லை எனக் குறிப்பிட்ட அவர், தேர்தல் வெற்றிக்குப் பிறகோ கூட்டணி விவகாரங்களிலோ திமுக தனது கொள்கை நிலைப்பாடுகளை மாற்றியதில்லை எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.