திருச்சியில் ரூ.61 கோடியில் மெமு ரயில் பனிமனை.. 95 சதவீத பணிகள் நிறைவு.. அதிவேக மின்சார மெமு ரயில்கள் இயக்க திட்டம்!
Trichy Memu Train Shed : திருச்சி மாவட்டத்தில் ரூ. 61 கோடியில் கட்டப்பட்டு வரும் மெமு ரயில் கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும், இது 2027 ஜனவரி மாதம் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்சி மாவட்டத்தில் ரூ. 61 கோடியில் பனிமனை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பனிமனையானது 2027 ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மஞ்சத்திடல் ரயில் நிலையம் அருகே ரூ. 61 கோடி மதிப்பீட்டில் 5- ஆவது மெமு ரயில் பராமரிப்பு பனிமனை கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2024- ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பணிகள் தற்போது 95 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. இந்த பனிமனையில் தலா 12 பெட்டிகள் கொண்ட 2 மெமு ரயில்களை ஒரே நேரத்தில் நிறுத்தி முழுமையாக ஆய்வு செய்து பராமரிக்கும் வசதி உள்ளது. அத்துடன், 2 மெமு ரயில்களை ஒரே நேரத்தில் தூய்மை செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக மின்சார மெமு ரயில்கள் அறிமுகப்படுத்த திட்டம்
அத்துடன், இந்த பனிமனை பயன்பாட்டுக்கு வந்ததும், இதன் மூலம் திருச்சி மற்றும் மதுரை கோட்டங்களில் இயக்கப்படும் அதிவேக மின்சார மெமு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, டீசல் மூலமாக மெமு ரயில்களை இயக்கி வரும் ஒரே கோட்டமாக திருச்சி ரயில்வே கோட்டம் இருந்து வருகிறது. இதனால், புதிய பனிமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்தவுடன், டீசல் ரயில்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் அதிவேக மெமு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: தமிழகத்தில் புதிய நண்பர் இருக்கிறார்.. அவரை பார்க்க ராகுல் காந்தி வந்திருப்பார்.. உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
திருச்சியில் 5- ஆவது மெமு ரயில் பனிமனை
தற்போது, தாம்பரம், ஆவடி, பாலக்காடு, கொல்லம் ஆகிய 4 இடங்களில் மட்டுமே மெமு ரயில் பணிமனைகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து, 5- ஆவது மெமு ரயில் பனிமனை திருச்சியில் அமைய உள்ளது. இந்த பனிமனை, பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 95 சதவீதம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சி உள்ள 5 சதவீதம் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு ரயில் பனிமனை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது தொடர்பாக, ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில்,
2027 ஜனவரி மாதம் மெமு ரயில் பனிமனை திறக்க வாய்ப்பு
தற்போது தயாராகி வரும் மெமு ரயில் பனிமனையின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. தற்போது, மின்சார விநியோகத்தை நிறுத்தி வைப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, மஞ்சத்திடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பழைய மின் கம்பங்கள், மின் கம்பிகள், மின்மாற்றிகள் ஆகியவற்றை மாற்றும் பணிகள் இந்த வாரம் நடைபெற உள்ளன. இந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர் ஜனவரி மாதம் பனிமனை பயன்பாட்டுக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: தொகுதி மறுவரையறையில் திமுக நிலைப்பாடு என்ன? ஸ்டாலின்- ராகுல் சந்திப்புக்கு நடுவே கனிமொழி கூறிய அந்த வார்த்தை!