திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா மதிமுக?.. முதல்வர் விஜய்யை இன்று சந்திக்கிறார் வைகோ!!
மற்ற கட்சிகள் தவெக அரசை விமர்சித்து வரும் சூழலில், வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் தவெக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகவே தொடர்ந்து பேசி வருகின்றனர். அண்மையில் பேசிய துரை வைகோ, "துரதிர்ஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டோம்" என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை, ஜுன் 17: தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ இன்று பிற்பகல் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படும் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது. இன்று மாலை 3:30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும், மதிமுக-வின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கு இந்தச் சந்திப்பு அடித்தளமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: “வளர்த்த கடா மார்பில் பாய்கிறது!”.. சேர்த்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைப்பாரா?.. விஜயபாஸ்கருக்கு ஆர்.பி.உதயகுமார் சரமாரி கேள்வி!
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா மதிமுக?
வருகிற ஜூன் 27-ஆம் தேதி மதிமுக-வின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. குறிப்பாக, திமுக கூட்டணியில் மதிமுக-வுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அக்கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. திமுக தங்களை நசுக்கப் பார்ப்பதாக மதிமுக அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் உள்ளிட்டோர் ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறி, தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெக அரசுக்கு ஆதரவான நிலைப்பாடு:
மற்ற கட்சிகள் தவெக அரசை விமர்சித்து வரும் சூழலில், வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் தவெக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகவே தொடர்ந்து பேசி வருகின்றனர். அண்மையில் பேசிய துரை வைகோ, “துரதிர்ஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டோம்” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சந்திப்பின் பின்னணி மற்றும் நோக்கங்கள்:
நாடாளுமன்றத்தில் வைகோ ஆற்றிய பணிகள் குறித்த புத்தகத்தை மதிமுக வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் விஜய்யிடம் வாழ்த்துச் செய்தி பெறுவது இந்தச் சந்திப்பின் ஒரு நோக்கமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
முன்னோடிச் சந்திப்புகள்:
நேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வைகோவை நேரில் சந்தித்துப் பேசினார். அதற்கு முன்பாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவும் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து, திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பேசியிருந்தார்.
இதையும் படிக்க: மனவலியோடு அதிமுகவில் இருந்து விலகுகிறேன்.. ராஜினாமா செய்த கையோடு சி. விஜயபாஸ்கர் அதிரடி முடிவு..
இந்தத் தொடர் சந்திப்புகளின் நீட்சியாக இன்று வைகோ, முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திக்கவிருப்பது தமிழக அரசியலில் புதிய கூட்டணி மாற்றத்திற்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.