AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் மாமனாரைக் கொன்ற மருமகள்.. கைது செய்யாமல் விடுவித்த போலீசார்.. அதிர வைக்கும் பின்னணி!

கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டாலும், நீதிமன்ற விசாரணையின் போது அந்தப் பெண் தன் மீது தவறில்லை என்பதை முறைப்படி நிரூபிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கு முன்னதாக, கடந்த 2012-ஆம் ஆண்டு மதுரையில் தனது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கணவனை, அவரின் தாய் தற்காப்புக்காகக் கட்டையால் அடித்துக் கொன்றார்.

சென்னையில் மாமனாரைக் கொன்ற மருமகள்.. கைது செய்யாமல் விடுவித்த போலீசார்.. அதிர வைக்கும் பின்னணி!
உயிரிழந்த பெருமாள்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 03 Jul 2026 10:11 AM IST

சென்னை, ஜூலை 03: சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில், பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரைக் கத்தியால் குத்திக் கொன்ற மருமகளைக் காவல்துறை கைது செய்யாமல் விடுவித்திருக்கும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனகாபுத்தூர் கஸ்தூரிபாய் நகர் பகுதியில் வசித்து வந்த இளம்பெண் ஒருவரின் கணவர், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் அந்தப் பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் கணவரின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

மேலும் படிக்க: நெல்லையில் தந்தை- மகன் கொடூரமாக வெட்டி கொலை.. தலையை சாலையில் வீசி சென்ற கும்பல்!

சம்பவத்தின் பின்னணி:

இந்நிலையில், அந்தப் பெண்ணின் மாமனாரான பெருமாள் என்பவர், அவருக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. “நான் உனக்குச் சம்பாதித்துக் கொடுக்கிறேன்; அதனால் என்னுடைய தேவைகளை நீ நிவர்த்தி செய்ய வேண்டும்” என்று கூறி அவர் வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் தனது மாமியாரிடம் முறையிட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே மோதல் ஏற்பட்டு, மாமியார் கோபித்துக் கொண்டு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

நள்ளிரவில் நடந்த துயரம்:

கடந்த ஜூன் 29-ஆம் தேதி இரவு, அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு சுமார் 2.30 மணியளவில் பெருமாள் கதவைத் தட்டி, மருமகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மற்றும் அச்சமடைந்த அந்தப் பெண், தற்காப்புக்காக வீட்டில் இருந்த சிறிய காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து மாமனாரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டது ஏன்?

இச்சம்பவம் குறித்துச் சங்கர் நகர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்தப் பெண் முற்றிலும் தனது தற்காப்புக்காகவும், மானத்தைக் காத்துக் கொள்ளும் நோக்கிலுமே இந்தச் செயலில் ஈடுபட்டார் என்பது தெரியவந்தது. மேலும், மாமனாரின் சொந்தக் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் அந்தப் பெண்ணிற்கு ஆதரவாகவே வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதன் காரணமாக, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவு 34-ன்கீழ் (தனிநபரின் தற்காப்பு உரிமை) இந்த வழக்கை கொண்டுவரப் போலீசார் பரிந்துரைத்துள்ளனர். இச்சட்டப்பிரிவின்படி, ஒரு நபர் தன் உயிரையோ அல்லது சொத்தையோ ஆபத்திலிருந்து காத்துக் கொள்ளச் செய்யும் எந்தவொரு செயலும் குற்றமாகக் கருதப்படாது. இதன் அடிப்படையில் அந்தப் பெண் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

முந்தைய வழக்கின் முன்னுதாரணம்:

கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டாலும், நீதிமன்ற விசாரணையின் போது அந்தப் பெண் தன் மீது தவறில்லை என்பதை முறைப்படி நிரூபிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கு முன்னதாக, கடந்த 2012-ஆம் ஆண்டு மதுரையில் தனது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கணவனை, அவரின் தாய் தற்காப்புக்காகக் கட்டையால் அடித்துக் கொன்றார். அப்போதைய மதுரை எஸ்பி (தற்போதைய உளவுத்துறை ஐஜி) அஸ்ரா கார்க், அந்தப் பெண்ணின் செயலைத் தற்காப்பு நடவடிக்கை என உறுதி செய்து கைது செய்யாமல் விடுவித்தார். அந்தச் சம்பவத்தைப் போலவே தற்போதைய அனகாபுத்தூர் சம்பவமும் சட்டரீதியாகக் கையாளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா தொகுதிகளில் தேர்தலுக்கு தடை… தேர்தல் ஆணையத்தில் இன்பதுரை புகார் மனு!

போலீசாரின் முக்கிய எச்சரிக்கை:

இதே வேளையில் காவல்துறை ஒரு முக்கிய எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. இது போன்ற பாலியல் தொல்லைகள் ஏற்படும் பட்சத்தில், பெண்கள் முதலில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முன்வர வேண்டும். அதை விடுத்து, திட்டமிட்டு வேறு ஏதேனும் காரணங்களுக்காகக் கொலை செய்துவிட்டு, பின்னர் அதனைத் ‘தற்காப்பு’ என்று கூறி சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என்றும் போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Follow Us