சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் 8 வயது சிறுமி கடத்தல்.. போலீஸ் விசாரணை வெளியான பகீர் தகவல்..
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே ஜார்கண்ட் செல்லும் ரயிலைப் பிடிக்க ஷனிஜல் தாஸ் திட்டமிட்டிருந்தார். இந்தச் சூழலில், நள்ளிரவு நேரத்தில் ஷனிஜல் தாஸ் மற்றும் அவரது மனைவி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், அருகில் படுத்திருந்த அவர்களது 8 வயது மகளை தூக்கிச் சென்று கடத்த முயன்றுள்ளார்.
ஜூலை 3, 2026: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது 8 வயது சிறுமியை போதையில் இருந்த நபர் ஒருவர் கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷனிஜல் தாஸ் என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் திருச்சியில் தங்கி விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சொந்த ஊரான ஜார்கண்ட் செல்வதற்காக நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் சென்னை வந்திருந்தார்.
8 வயது மகளை தூக்கிச்சென்ற போதை ஆசாமி:
இரவு நேரமாகிவிட்டதால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே தங்கிவிட்டு, மறுநாள் ஜார்கண்ட் செல்லும் ரயிலைப் பிடிக்க திட்டமிட்டிருந்தார். இந்தச் சூழலில், நள்ளிரவு நேரத்தில் ஷனிஜல் தாஸ் மற்றும் அவரது மனைவி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், அருகில் படுத்திருந்த அவர்களது 8 வயது மகளை தூக்கிச் சென்று கடத்த முயன்றுள்ளார்.
சிறுமி அழுதபோதிலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெற்றோருக்கு அது தெரியவில்லை. சிறுமியை தூக்கிச் சென்ற நபர் குடிபோதையில் இருந்ததுடன், தோளில் சுமந்தபடி சாலையில் சினிமா பாடல்களைப் பாடிக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
சிறுமியை பத்திரமாக மீட்ட போலீஸ்:
பயந்துபோன சிறுமி உரக்கக் கத்தி அழுததால், அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் சந்தேகமடைந்து அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். பின்னர், சிறுமியை அவரிடமிருந்து பத்திரமாக மீட்டு பெரியமேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த பெரியமேடு காவல்துறையினர், சிறுமியை பாதுகாப்பாக மீட்டதுடன், கடத்திச் செல்ல முயன்ற நபரையும் கைது செய்தனர். இதற்கிடையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போனதை அறிந்த பெற்றோர் பதற்றமடைந்து, ரயில் நிலையம் முழுவதும் தேடினர்.
சிறுமியை கடத்தியது ஏன்? விசாரணையில் கொடுத்த வாக்குமூலம்:
பின்னர், காவல்துறையினர் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அவரை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட நபர், சென்னை அடுத்த பொன்னேரியைச் சேர்ந்த 42 வயதான சசிகுமார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் பெயிண்டராக வேலை செய்து வந்ததாகவும், சென்னையில் வேலை முடித்துவிட்டு பொன்னேரி செல்வதற்காக புறநகர் ரயில் நிலையத்திற்கு வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இரவு நேரமாகிவிட்டதால் ரயில் நிலையத்திலேயே தங்க முடிவு செய்த அவர், குடிபோதையில் அந்தச் சிறுமியை தூக்கிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், போலீஸ் விசாரணையில், தனது மனைவியும் குழந்தைகளும் தன்னை விட்டுப் பிரிந்து சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சலில், அந்தச் சிறுமியை தூக்கிச் சென்று வளர்க்க நினைத்ததாக சசிகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட சசிகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.