வடகிழக்கு பருவமழை.. செப். 30 ஆம் தேதிக்கு பின் சாலை பணிகளுக்கு நோ சொன்ன சென்னை மாநகராட்சி..
இதுவரை 2,831 சாலைகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் (CMWSSB), மின்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் தற்போது 501 இடங்களில் சாலைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜூலை 3, 2026: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகரில் நடைபெற்று வரும் அனைத்து சாலை வெட்டும் பணிகளையும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து சேவைத் துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்தக் காலக்கெடுவுக்குப் பிறகு சாலை வெட்டுவதற்கு எந்தத் துறைக்கும் அனுமதி வழங்கப்படாது என்றும், அனைத்து துறைகளும் தங்களது தோண்டுதல் மற்றும் குழாய் பதிப்பு உள்ளிட்ட பணிகளை செப்டம்பர் 30-க்குள் முடிக்க வேண்டும் என்றும் மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் மேற்கொள்ளப்படும் சாலை பணிகள்:
எனினும், வடகிழக்கு பருவமழை தாமதமாகத் தொடங்கும் சூழல் ஏற்பட்டால், நிலைமையைப் பொறுத்து இந்தக் காலக்கெடு மறுஆய்வு செய்யப்படும் என மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இல்லையெனில், புதிய சாலை வெட்டும் பணிகளுக்கு டிசம்பர் மாதத்திற்குப் பிறகே அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, உள்சாலைகள் மற்றும் பேருந்து வழித்தடச் சாலைகளில் மொத்தம் 6,812 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், ஜூலை 1, 2026 நிலவரப்படி 4,362 சாலை வெட்டும் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், இதுவரை 2,831 சாலைகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் (CMWSSB), மின்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் தற்போது 501 இடங்களில் சாலைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சாலை பணிக்கு பின் சீரமைப்பு பணிகள் அவசியம்:
சிறிய அளவிலான குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்காக தோண்டப்படும் சாலைகளை மீண்டும் சீரமைக்கும் பொறுப்பு முழுமையாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கே உள்ளது என்றும், இதன் முன்னேற்றத்தை கண்காணிக்க ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாநகராட்சி இணை ஆணையர் (பணிகள்) தலைமையில் துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாலை வெட்டும் பணிக்கு அனுமதி கோரி அதிக விண்ணப்பங்கள்:
சமீபகாலமாக சாலை வெட்டும் அனுமதி கோரும் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக புதிய பணிகளுக்கு அனுமதி வழங்கப்படாததும், பின்னர் பெய்த இடையிடையேயான மழையும் இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்தப் பணிகளுக்கான செலவுகள் அந்தந்த மண்டலங்கள் மற்றும் வார்டுகளுக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சொத்து வரி செலுத்தவில்லையா? சென்னை மாநகராட்சி தரப்பில் இன்று முதல் சிறப்பு முகாம்.. எங்கெல்லாம் தெரியுமா?
இதற்கிடையே, கீழ்ப்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சில சாலைகளில் மேடு, பள்ளங்கள் நீடித்து வருவதால், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட சாலைகளை மாநகராட்சி பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்து, சாலையின் மட்டம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படவுள்ளனர். மேலும், சாலைகளில் ஏற்படும் மேடு, பள்ளங்களை முழுமையாக அகற்ற ஒரே தீர்வு, பழைய சாலையை முழுவதுமாக அரைத்து (Milling), தொடக்கம் முதல் முடிவு வரை புதிய தார்ச்சாலை அமைப்பதே என அதிகாரிகள் தெரிவித்தனர்.