எத்தனை லட்சம் வாக்காளர்கள் நீக்கம்? முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் உள்ளிட்ட விஐபி தொகுதிகளின் நிலவரம்!!
voters draft list: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 2,90,653 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், கொளத்தூர் தொகுதியில் 1,03,812 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனவே தற்போதைய நிலையில் 1,86,841 பேர் மட்டுமே வாக்காளர்களாக உள்ளது தெரிய வந்துள்ளது.

கோப்புப் புகைப்படம்
சென்னை, டிசம்பர் 20: தமிழகத்தில் தீவிர திருத்தப்பணிக்கு பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது பட்டியலில் 5.43 கோடி வாக்காளர்களே உள்ளனர். இதன் மூலம் தமிழகம் 14 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்கு வந்துள்ளது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக சென்னையில், 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் 4ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியது. சென்னையைப் பொறுத்தவரையில் 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கீட்டு படிவங்களை வழங்கி வந்தனர். இப்பணிகள் கடந்த 14ம் தேதியுடன் முடிவடைந்து, பெறப்பட்ட விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
இதையும் படிக்க : அதிமுக இடத்தை குறி வைக்கும் தவெக…விஜய்யின் திட்டம் பலிக்குமா?பொய்க்குமா?
சென்னையில் 14.25 லட்சம் பேர் நீக்கம்:
அதன்படி, சென்னையில் கடந்த அக்டோபர் 27ம் தேதி கணக்கீட்டின் படி, 19,62,245 ஆண் வாக்காளர்கள், 20,41,144 பெண் வாக்காளர்கள், 1,305 இதர வாக்காளர்கள் என மொத்தம் 40,04,694 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.தற்போது நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் படி, சென்னை மாவட்டத்தில் 12,47,690 ஆண் வாக்காளர்கள், 13,31,243 பெண் வாக்காளர்கள், 743 இதர வாக்காளர்கள் என மொத்தம் 25,79,676 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மேலும் 14,25,018 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. அதாவது, 1,56,555 பேர் இறந்த வாக்காளர்கள், 12,22,164 பேர் இடம்பெயர்ந்தவர்கள், கண்டறிய முடியாதவர்கள் – 27,328 பேர். இதர இன வாக்காளர்கள் – 199 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் – 18,772 பேர் என்ற அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேளச்சேரி தொகுதியில் அதிக வாக்காளர்கள் நீக்கம்:
சென்னையில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 1,27,521 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அண்ணாநகர் தொகுதியில் 1,18,287 வாக்காளர்கள், விருகம்பாக்கம் தொகுதியில் 1,10,824 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதேபோல், குறைந்தபட்சமாக ராயபுரம் தொகுதியில் 51,711 வாக்காளர்கள், ஆர்.கே.நகர் தொகுதியில் 56,916 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
முதல்வரின் கொளத்தூர் தொகுதி நிலவரம்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 2,90,653 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், கொளத்தூர் தொகுதியில் 1,03,812 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனவே தற்போதைய நிலையில் 1,86,841 பேர் மட்டுமே வாக்காளர்களாக உள்ளனர்.
துணை முதல்வர் தொகுதி நிலவரம்:
இதேபோல், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், நவம்பர் 27-ந்தேதி கணக்கின் படி 2,40,087 வாக்காளர்கள் இருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியலில் 89,241 பேர் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது 1,50,846 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
இபிஎஸ் தொகுதி நிலவரம்:
சேலம் மாவட்டத்தில் விஐபி தொகுதியாக எடப்பாடி சட்டசபை தொகுதி கருதப்படுகிறது. இந்த தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். எடப்பாடி தொகுதியில் கடைசியாக நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 2,93,749 வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இதனிடையே, சிறப்பு திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில், அதில் 26,375 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : திருப்பரங்குன்றத்தில் தீ குளித்தவரின் உயிரிழப்புக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்…நயினார் நாகேந்திரன்!
2011ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.50 கோடியாக இருந்தது. இந்நிலையில், 2025ல் தற்போது வெளியாகியுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இதன் மூலம் வாக்காளர் எண்ணிக்கையில் தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்கும் கீழ் சென்றுள்ளது.