கள்ளக்குறிச்சி விவகாரம்.. ஆட்சியரிடம் கருத்து கேட்டு விளக்கமளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
High Court Seeks Kallakurichi Collector Response: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் எந்தப் புகாரும் வரவில்லை எனக் காவல்துறை விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட ஆட்சியரிடம் கருத்துகளைப் பெற்று விளக்கம் அளிக்குமாறு அரசுத் தரப்பிற்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.
சென்னை, நவ.23: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக தங்களிடம் எந்தப் புகாரும் வரவில்லை என காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி, சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் திரிசூலி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், செய்தித்தாள்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையமும் விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், முறையான புகார் வரும் வரை காத்திருக்காமல் பொதுவெளித் தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்! மகளிர் ஆணையத்தின் 7 நாள் கெடு நிறைவு.. டிஜிபிக்கு கேள்வி எழுப்பிய NCW!
நீதிபதி கேள்வியும், காவல்துறையின் பதிலும்:
வழக்கு விசாரணையின்போது, செய்தித்தாளில் வெளியான செய்தியின் அடிப்படையில் மட்டுமே காவல்துறைக்கு எவ்வாறு உத்தரவிட முடியும் என நீதிபதி லட்சுமி நாராயணன் கேள்வி எழுப்பினார். மேலும், ஆபாசக் குறுஞ்செய்தி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஏதேனும் புகார் அளித்துள்ளாரா என்றும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்றும் அவர் வினவினார். அதற்குப் பதிலளித்த காவல்துறை தரப்பு, இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலாளர் உட்பட யாருக்கும் எந்தப் புகாரையும் அனுப்பவில்லை எனத் தெரிவித்தது; தேசிய மகளிர் ஆணையமும் செய்தித்தாள் தகவலின் அடிப்படையிலேயே விளக்கம் கேட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.
மனுதாரரின் குற்றச்சாட்டு:
தொடர்ந்து வாதாடிய மனுதாரர் தரப்பு, தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கோரியுள்ள சூழலைச் சுட்டிக்காட்டியதுடன், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரைப் பாதுகாப்பதற்காக அனைத்து உயரதிகாரிகளும் முயற்சித்து வருவதாகக் குற்றம் சாட்டியது. பொதுவெளியில் எழுந்துள்ள இந்த விவகாரத்திற்குத் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மனுதாரர் தரப்பு மீண்டும் வலியுறுத்தியது.
இதையும் படிக்க: உள்ளாட்சி ஊழியர்களுக்கு புதிய பணிமாறுதல் விதிகள்.. 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர அனுமதி இல்லை!
நீதிமன்ற உத்தரவும் விசாரணை ஒத்திவைப்பும்:
மாவட்ட ஆட்சியரிடமிருந்து எந்தப் புகாரும் வராத நிலையில், இந்த வழக்கை விசாரிக்கப் போவதில்லை என நீதிபதி லட்சுமி நாராயணன் தெரிவித்தார். இருப்பினும், சட்டமன்ற உறுப்பினர் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியது உண்மையாக இருக்கும்பட்சத்தில் அது துரதிஷ்டவசமானது எனக் குறிப்பிட்ட நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் கருத்துகளைக் கேட்டு விளக்கம் அளிக்குமாறு அரசுத் தரப்பிற்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.