கனமழை எதிரொலி: ராமேஸ்வரத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
‘தித்வா’ புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால், பாம்பன் பாலம் வழியே செல்ல இருந்த அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த பகுதிகளில் 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமநாதபுரம், நவம்பர் 28: தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்கிழக்கு இலங்கை இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சூறாவளி புயலாக நேற்றைய தினம் (நவ.27)வலுப்பெற்றது. ‘தித்வா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் 10 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு–வடமேற்கு நோக்கி நகர்ந்து, சென்னைக்கு 560கி.மீ தூரத்திலும், புதுச்சேருக்கு 460 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10கி.மீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
மேலும் படிக்க: இலங்கையை புரட்டிப்போட்ட தித்வா புயல் – இதுவரை 20 பேர் பலி, 14 பேர் மாயம் – தமிழகத்திலும் எதிரொலிக்குமா?
புயலால் கனமழை கொட்டித்தீர்க்கும்:
இந்த தித்வா புயலானது அடுத்து வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகிற 30-ந்தேதி அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும் என ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று அதி கனமழை எச்சரிக்கை:
அதன்படி, இன்று தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும். இதுதவிர ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை இங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு:
தொடர்ந்து, நாளை (நவ.29) தமிழக வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேசமயம், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : நவ.29 அன்று தமிழகத்தில் கொட்டித் தீர்க்க உள்ள கனமழை.. வெதர்மேன் எச்சரிக்கை!
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.28) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 5-வது நாளாக இன்றும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.