Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இலங்கையை புரட்டிப்போட்ட தித்வா புயல் – இதுவரை 20 பேர் பலி, 14 பேர் மாயம் – தமிழகத்திலும் எதிரொலிக்குமா?

Ditwah Cyclone Impact : தித்வா புயலால் இலங்கையில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 14 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புயலால் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்துமா என மக்களிடையே கவலை அதிகரித்துள்ளது.

இலங்கையை புரட்டிப்போட்ட தித்வா புயல் – இதுவரை 20 பேர் பலி, 14 பேர் மாயம் – தமிழகத்திலும் எதிரொலிக்குமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 Nov 2025 21:04 PM IST

தித்வா (Ditwah) புயல் இலங்கையை கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் இலங்கை முழுவதும் பெய்து வரும் கனமழையின் காரணமாக, நீர் நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. ஆங்காங்கே நிலச்சரிவினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மழை தொடர்வதால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் கனமழை (Heavy Rain) காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மழையின் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கனமழையால் இலங்கையில் கடும் பாதிப்பு

தித்வா புயல் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. தொடரும் மழையால் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. கனமழையால் கொத்மலை அணை நிரம்பி வழிந்ததால் கட்டாயமாக அணையின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அணையின் அருகே உள்ள பகுதிகள் முழுவதும் ஆறுகள் ஆபத்தான அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால் ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்.. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

இந்த நிலையில்  கம்பளை – நுவரேலியா தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு காரணமாக சாலைப்போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.  இந்த நிலச்சரிவில், இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று, காந்தி மற்றும் கங்கொடா பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 14 பேர் என்ன ஆனார்கள் என்பதே தெரியாத நிலை உள்ளது.

நிலச்சரிவு அபாயப் பகுதிகளில் வசித்து வந்த மக்கள், பாதுகாப்பானது என கருதி ஒரு வீட்டைத் தேர்ந்தெடுத்து அதில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் அந்த வீடே நிலச்சரிவில் இடிந்து விழுந்திருக்கிறது. இதனால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

அம்பாறை மாவட்டத்தில் துயர சம்பவம்

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வெள்ளநீரில் குறுக்கிட்டிருக்கிறது. இந்த வெள்ளத்தில் அந்த கார் அடித்து செல்லப்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க : இந்த 6 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் – எப்போ தெரியுமா? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கனமழையால் கண்டி மாவட்டம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. வீடுகள் இடிந்து விழும் காட்சிகள் பல இடங்களில் பதிவாகியுள்ளன.  கண்டி மாவட்டத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். தித்வா புயல் தாக்கத்தால் இலங்கையில் வானிலை மேலும் மோசமடையும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  கனமழை தொடரும் என்பதால் வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பாதிப்பு அதிகரிக்கும் உருவாகியுள்ளது.