“திமுகவில் அதிரடி மாற்றங்களை கொண்டு வரப்போகிறேன்”.. மு.க.ஸ்டாலினின் புதிய முன்னெடுப்பு!!
தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் கட்சியின் மேம்பாடு குறித்து எவரும் இதில் கருத்து தெரிவிக்கலாம். நேரடியாகத் தட்டச்சு செய்தோ அல்லது கைப்பட எழுதிய காகிதத்தைப் புகைப்படம் எடுத்தோ பதிவேற்றலாம். இதில் உள்ள நவீனத் தொழில்நுட்பம் மூலம், பயனர்கள் தங்கள் குரலில் பேசினால் அதுவாகவே தட்டச்சு ஆகிவிடும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த பின்னரும், மக்கள் மத்தியில் இன்னும் அந்தப் பரபரப்பு குறையவில்லை. செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் தேர்தல் குறித்த பேச்சுகளே பிரதானமாக உள்ளன. இந்தச் சூழலில் மனம் திறந்து பேசிய மு.க.ஸ்டாலின், தோல்வியை மறைக்காமல் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். “2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் திமுகவிற்குப் மிகப்பெரிய பின்னடைவு என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இது நிச்சயமாக நாம் எதிர்பார்த்த முடிவு அல்ல. ஆனால், இந்தத் தோல்விக்காக யாரும் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்த வேண்டாம். வெற்றிக்கான பெருமை எனக்கு வந்து சேரும்போது, தோல்விக்கான பழியையும் நானே ஏற்க வேண்டும். திமுக தலைவராக இந்தத் தோல்விக்கு நானே முழுப் பொறுப்பேற்கிறேன். அதுவே ஒரு தலைவனுக்கு அழகு,” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.
மேலும் படிக்க: தவெக அமைச்சரவையில் காங்கிரசுக்கு 2 இடங்கள்? டெல்லியில் ராகுல் காந்தியுடன் எம்எல்ஏக்கள் முக்கிய ஆலோசனை!
‘உடன்பிறப்பின் குரல்’ – மக்களுடன் நேரடித் தொடர்பு
தோல்வியால் முடங்கிவிடாமல், அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாராக வேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதற்காக, கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் நேரடியாகத் தெரிவிக்க udanpirapinkural.in என்ற புதிய இணையதளத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்த இணையதளத்தின் சிறப்பம்சங்கள்:
தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் கட்சியின் மேம்பாடு குறித்து எவரும் இதில் கருத்து தெரிவிக்கலாம். நேரடியாகத் தட்டச்சு செய்தோ அல்லது கைப்பட எழுதிய காகிதத்தைப் புகைப்படம் எடுத்தோ பதிவேற்றலாம். இதில் உள்ள நவீனத் தொழில்நுட்பம் மூலம், பயனர்கள் தங்கள் குரலில் பேசினால் அதுவாகவே தட்டச்சு ஆகிவிடும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. விரிவான ஆலோசனைகளை ஆவணங்களாகவும் சமர்ப்பிக்கலாம்.
காலத்திற்கேற்ப மாற்றம்: உருவாகிறது திமுக 2.0
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன?
இனி நாம என்ன பண்ணணும்?உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன்.
🔗: https://t.co/jtdLm3hPyS pic.twitter.com/Ltg6iUgLw9
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 14, 2026
“காலத்திற்கேற்ப மாறாவிட்டால் நாம் பின்தங்கிவிடுவோம்” என்பதை உணர்ந்துள்ள மு.க.ஸ்டாலின், கட்சியின் அணுகுமுறை, சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார். இணையதளத்தில் வரும் ஒவ்வொரு கருத்தையும் தானே படித்து, பரிசீலித்து, அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக அவர் உறுதியளித்துள்ளார். விமர்சனங்கள் எவ்வளவு கசப்பானதாக இருந்தாலும், உண்மையை வெளிப்படையாகச் சொல்லுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அடிமட்டத் தொண்டர்கள் முதல் உயர்மட்ட நிர்வாகிகள் வரை கட்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றங்கள் செய்யப்படும்.
தொண்டர்களிடையே புதிய நம்பிக்கை:
“தோற்றுவிட்டோம் என்று முடங்கிவிட மாட்டேன்; உடனே ‘அப்டேட்’ ஆகிக்கொண்டு வருவேன்” என்று மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது திமுக தொண்டர்களிடையே புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் உருவாகப் போகும் ‘திமுக 2.0’ என்பது ஒரு புதிய அரசியல் பயணத்தின் தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலில் வெற்றி தோல்விகள் சகஜம் என்றாலும், தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தன்னைத்தானே மாற்றிக்கொள்ளத் தயாராகும் இந்த முயற்சி தமிழக அரசியலில் உற்று நோக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
மேலும் படிக்க: ஓய்வு பெற்ற எஸ்ஐ மகள் கொன்று புதைப்பு.. கள்ளத் தொடர்பால் காண்டிராக்டர் மனைவி கொடூர செயல்.. தூத்துக்குடியில் அதிரவிடும் சம்பவம்!