தவெக அமைச்சரவையில் காங்கிரசுக்கு 2 இடங்கள்? டெல்லியில் ராகுல் காந்தியுடன் எம்எல்ஏக்கள் முக்கிய ஆலோசனை!
அமைச்சரவையில் இடம் பெறுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்குள் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. குறிப்பாக ராஜேஷ்குமார் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களில் மூத்தவர் என்பதால், அவருக்கு கடந்த முறையைப் போலவே இந்த முறையும் சட்டசபை குழுத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் அமைச்சர் பதவியையே விரும்புவதாகத் தெரிகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையிலும், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் விவாதிக்க நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை அவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 28 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் தீவிரமான போட்டிக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மேலும் படிக்க: 21 வயது கீழ் இருப்பவர்களுக்கு மது பாட்டில் கிடையாது.. மீறினால் கடும் நடவடிக்கை – டாஸ்மாக் நிர்வாகம்…
அமைச்சரவை உருவாக்கத்தில் காங்கிரஸ்:
இதில் குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, மேலூர், மயிலாடுதுறை என மொத்தம் 5 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. குளச்சலில் தாரகை கத்பர்ட், கிள்ளியூரில் ராஜேஷ்குமார், விளவங்கோட்டில் பிரவீன் ஆகியோரும், மேலூரில் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், மயிலாடுதுறையில் ஜமால் முகமது யூனுஸ் ஆகியோரும் வெற்றி பெற்றார்கள். இந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியின் வெற்றியை உறுதி செய்ததோடு, தற்போது தமிழக அமைச்சரவை உருவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகிக்க உள்ளனர்.
டெல்லி சந்திப்பு மற்றும் மேலிட ஆலோசனை:
வெற்றி பெற்ற 5 எம்எல்ஏக்களும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் நேற்று டெல்லி சென்றனர். அங்கு அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர். அதன்பின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, சோனியா காந்தியின் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். குறிப்பிடத்தக்க விஷயமாக, இந்த முக்கியமான டெல்லி சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உடன் செல்லவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
தவெக அமைச்சரவையில் 2 இடங்கள்:
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிரிஷ் சோடங்கர், கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்பது குறித்து ராகுல் காந்தி விரிவாகப் பேசியதாகக் குறிப்பிட்டார். அவர் தெரிவித்த தகவலின்படி, “முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் காங்கிரசுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளன. இந்த இரண்டு இடங்களுக்கு 5 எம்.எல்.ஏ.க்களில் யாரைத் தேர்வு செய்வது என்பது குறித்து டெல்லியில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.”
யார் அமைச்சர்கள்? – கட்சிக்குள் நிலவும் இழுபறி:
அமைச்சரவையில் இடம் பெறுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்குள் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. குறிப்பாக ராஜேஷ்குமார் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களில் மூத்தவர் என்பதால், அவருக்கு கடந்த முறையைப் போலவே இந்த முறையும் சட்டசபை குழுத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் அமைச்சர் பதவியையே விரும்புவதாகத் தெரிகிறது. அவர் அமைச்சராகப் பொறுப்பேற்க விரும்பினால், தற்போதுள்ள சட்டசபை குழுத் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ரூ.1,000 உதவித்தொகை வங்கிக் கணக்கில் வரவு.. அசுர வேகத்தில் நிதியை விடுவித்த முதல்வர் விஜய்!!
ஒருவேளை ராஜேஷ்குமார் தனது குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சராகப் பொறுப்பேற்றால், அந்தப் பதவி மூத்த உறுப்பினரான தாரகை கத்பர்ட்டுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு அமைச்சர் பதவி மேலூர் தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் எம்.பி-யுமான விஸ்வநாதனுக்கு வழங்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.