Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

AIADMK: கட்சியை உடைக்க பார்க்கின்றனர்.. செங்கோட்டையனுக்கு இபிஎஸ் பதிலடி!

Edappadi K Palaniswami: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பேசிய அவர், அதிமுகவை சிலர் உடைக்கப் பார்ப்பதாக குற்றம் சாட்டினார். ஏற்கனவே அதிமுகவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருபவர்களுக்கு இது பதிலடியாக அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

AIADMK: கட்சியை உடைக்க பார்க்கின்றனர்.. செங்கோட்டையனுக்கு இபிஎஸ் பதிலடி!
எடப்பாடி பழனிசாமி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 08 Sep 2025 07:52 AM IST

திண்டுக்கல், செப்டம்பர் 8: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை உடைக்க பார்க்கிறார்கள் என திண்டுக்கல்லில் நடைபெற்ற பிரச்சார நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் நடந்து வரும் நிகழ்வுகள் அடுத்தடுத்து அரசியல் களத்தை அதிரவைத்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி என இரட்டைத் தலைமைகளாக 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்தித்த அதிமுக தற்போது ஒற்றை தலைமையுடன் தேர்தலை சந்திக்கிறது. மேலும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் பிணக்கு ஏற்பட்டு கூட்டணியை முறித்துக் கொண்ட அதிமுக தற்போது மீண்டும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணி வைத்துள்ளது. அந்தக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

கூட்டணியில் மாற்றம்

இந்த நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆகியவை வெளியேறுவதாக அறிவித்தது. எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியதே இதற்கு காரணம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

இதையும் படிங்க: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன்.. அதிமுக நிர்வாகிகள் 300 பேர் ராஜினாமா..

ஒருங்கிணைந்த அதிமுக

இந்த நிலையில் அதிமுகவில் புதிய திருப்பமாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டு ஒருங்கிணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஒன்றிணைவது தொடர்பான நடவடிக்கைகளை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 10 நாட்களில் மேற்கொள்ள வேண்டும் என கெடு விதித்துள்ளார்.

இதனை அவர் செய்யாவிட்டால் அத்தகைய உணர்வுடன் இருப்பவர்களுடன் இணைந்து நானே மேற்கொள்வேன் எனவும் தடாலடியாக அறிவித்துள்ளார். இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்கப்படுவதில் உடன்பாடு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ’10 நாள் தான் டைம்.. இல்லையெனில்..’ எடப்பாடிக்கு கெடு விதித்த செங்கோட்டையன்.. அடுத்த பிளான் இதுதான்!

மேலும் அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கட்சியை உடைக்க பார்க்கின்றனர்


இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற பிரச்சார பயணத்தின் போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “அதிமுக கட்சியை எவ்வளவோ பேர் உடைக்க பார்க்கிறார்கள். முடக்க பார்க்கிறார்கள். அத்தனையும் தொண்டர்களாகிய உங்கள் துணையோடு தவிடு பொடியாக்கி வருகிறோம். இது தொண்டர்களின் கட்சி. எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது.  சாதாரண தொண்டன் கூட அதிமுகவில் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர், முதலமைச்சர் கூட ஆகலாம் என தெரிவித்தார். அவரின் இந்த பேச்சு செங்கோட்டையனுக்கான மறைமுக பதிலடி என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.