தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம்.. முதல் இடத்திலேயே செக் வைத்த காவல்துறை..
TVK Leader Vijay Campaign: திருச்சியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், சத்திரம் பேருந்து நிலையம் அருகே உரையாற்றுவதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மனு அளித்திருந்தார். ஆனால் காவல் துறை மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் அனுமதி மறுத்துள்ளது.

தமிழக வெற்றி கழகம், செப்டம்பர் 6, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், 2025 செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் மக்களை சந்திக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் அவர் திருச்சியில் இருந்து தனது முதற்கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தரப்பில் அதற்கான அனைத்து பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2024 பிப்ரவரி மாதத்தில் நடிகர் விஜய் தொடங்கிய இந்தக் கட்சியின் முதன்மை இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தல் என தெளிவாக அறிவிக்கப்பட்டது.
தற்போது, தேர்தல் நெருங்கியுள்ளதால் அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கட்சி தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தனி பிரச்சார வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: கொங்குவின் முக்கிய முகம்… ரூட்டை மாற்றுவாரா செங்கோட்டையன்? 2026 தேர்தலில் அதிமுகவுக்கு சிக்கல்
த.வெ.க தலைவர் விஜயின் சுற்றுப்பயணம்:
செப்டம்பர் 13, 2025 அன்று விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், முதலில் திருச்சியில் இருந்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. நான்கு இடங்களில் பிரச்சாரம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. அதில் ஒரு இடத்தில் தலைவர் விஜய் உரையாற்றுவதற்கான அனுமதி கேட்கப்பட்டிருந்தது. சத்திரம் பேருந்து நிலையம் அருகே உரையாற்றுவதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மனு அளித்திருந்தார்.
திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி மறுப்பு:
அப்போது, தமிழக வெற்றி கழகம் திட்டமிட்டிருந்த டிவிஎஸ் டோல்கேட், தலைமை அஞ்சலக ரவுண்டானா, மேல்புதூர், பாலக்கரை ரவுண்டானா, மரக்கடை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் நடத்தவும், சத்திரம் பேருந்து நிலையத்தில் உரையாற்றவும் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், சத்திரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடும் என்பதைக் காரணம் காட்டி அங்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் படிக்க: செங்கோட்டையனின் கட்சி பொறுப்பு பறிப்பு.. அதிமுக தலைமை அறிவிப்பு!
நான்கு இடங்களில் இரண்டு இடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சத்திரம் பேருந்து நிலையம் மாற்றாக மரக்கடை அல்லது உழவர் சந்தையில் விஜய் உரை நிகழ்த்தும் வகையில் திட்டமிடுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
திருச்சியை அடுத்து, அரியலூர், குன்னம், பெரம்பலூர் பகுதிகளிலும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கும் நிலையில், முதலிடத்திலேயே சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் சத்திரம் பேருந்து நிலையம் மாற்றாக வேறு ஒரு இடம் தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.