Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன்.. அதிமுக நிர்வாகிகள் 300 பேர் ராஜினாமா..

Admk Internal Clash: அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதன் எதிரொலியாக, ஈரோட்டில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக 300-க்கும் மேற்பட்டோர் அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து தங்கள் ராஜினாமாவை அறிவித்துள்ளனர். மேலும், இந்த பொறுப்புகள் முன்னாள் அமைச்சர் செல்வராஜுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன்.. அதிமுக நிர்வாகிகள் 300 பேர் ராஜினாமா..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 06 Sep 2025 20:17 PM IST

அதிமுக உட்கட்சி விவகாரம்: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவில் உட்கட்சி விவகாரம் வெளிப்படையாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அதிமுகவிலிருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்றும், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். மேலும், வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுக ஒன்றிணைய வேண்டியது அவசியம் என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதிப்பதாகவும் செங்கோட்டையன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செங்கோட்டையனின் கெடு – கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி:

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் இந்தக் கருத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். அதிமுக ஒன்றிணைவு நல்லது தான் என்றாலும், சமீப காலமாகவே கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. அந்த நிலையில் தான் செங்கோட்டையன் இக்கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார்.

இத்தகைய சூழலில், எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 6, 2025 அன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். திண்டுக்கல்லில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க: கொங்குவின் முக்கிய முகம்… ரூட்டை மாற்றுவாரா செங்கோட்டையன்? 2026 தேர்தலில் அதிமுகவுக்கு சிக்கல்

அதனைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து அனைத்து பொறுப்புகளிலும் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டது. இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதோடு, கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்டது சந்தோஷம் – செங்கோட்டையன்:

இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணத்தில் கருத்து தெரிவித்தேன். ஆனால் கட்சியிலிருந்து நீக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்” என தெரிவித்தார்.

செங்கோட்டையன் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் செல்வராஜுக்கு, செங்கோட்டையன் இடம் இருந்து பறிக்கப்பட்ட பதவிகள் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளன. அவருக்கு கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: செங்கோட்டையனின் கட்சி பொறுப்பு பறிப்பு.. அதிமுக தலைமை அறிவிப்பு!

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 300 பேர் ராஜினாமா:

எடப்பாடியின் இந்த நடவடிக்கையால் அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதன் எதிரொலியாக, ஈரோட்டில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக 300-க்கும் மேற்பட்டோர் அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து தங்கள் ராஜினாமாவை அறிவித்துள்ளனர்.