Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலக நயினார் நாகேனந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் பகீர் குற்றச்சாட்டு..

TTV Dinakaran: சிவகங்கை மாவட்டத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறக் காரணமே நயினார் நாகேந்திரன் தான். அவர் உள்ளொன்று வைத்துக்கொண்டு வெளியே வேறு விதமாக பேசுகிறார்” என தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலக நயினார் நாகேனந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் பகீர் குற்றச்சாட்டு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Sep 2025 21:55 PM IST

அதிமுகவில் உட்கட்சி விவகாரம், செப்டம்பர் 7, 2025: அதிமுகவில் உட்கட்சி விவகாரம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மனம் திறந்து பேட்டி அளித்திருந்தார். அப்போது அதிமுகவிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி மேற்கொள்ள வேண்டும், 10 நாள் அவகாசம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அடுத்த நாளே எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், உட்கட்சி விவகாரத்தை வெளியில் பேசியதற்காக செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவருடைய அனைத்து கட்சிப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டன.

இதனை எதிர்த்து பலரும் கருத்துக்கள் வெளியிட்டனர். இதேசமயம், ஈரோட்டில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக சுமார் 2,000 பேர் தங்களது அதிமுக பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அதிமுகவில் உள்ளக பிரச்சினை பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும் படிக்க: விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னை.. அதிமுக மாஜி எம்பி சத்தியபாமாவின் கட்சி பொறுப்பு பறிப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலக நயினார் நாகேனந்திரனே காரணம்:

இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் பேசுவதாக தெரிவித்தார். இதற்கு டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறக் காரணமே நயினார் நாகேந்திரன் தான். அவர் உள்ளொன்று வைத்துக்கொண்டு வெளியே வேறு விதமாக பேசுகிறார். பழனிசாமி போதும் என்று நினைக்கிறார். அகங்காரம் மற்றும் ஆணவத்துடன் நயினார் நாகேந்திரன் செயல்படுகிறார். எங்களை கூட்டணியில் இருந்து நீக்க அவர் திட்டமிட்டு இருந்தார்.

மேலும் படிக்க: ஓபிஎஸ், டிடிவியுடன் சமரசம் பேச தயார் – நயினார் நாகேந்திரன்!

தேசிய ஜனநாயக கூட்டணியில் என்னை இணைத்தது முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அவர் எனக்கு நல்ல நண்பர்; எப்போதும் நடுநிலையாக செயல்படுவார். தமிழ்நாட்டில் இன்றைய மனநிலை நயினார் நாகேந்திரனுக்கு புரியவில்லை. எனக்காக தேனி தொகுதியை விட்டுக் கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவருக்காக நான் பேசவில்லை என்றால் வேறு யார் பேசுவார்?” என கூறினார்.

எடப்பாடி பழனிசாமி மீது மட்டும் தான் கோபம் – டிடிவி தினகரன்:

மேலும், “அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியைத் தவிர வேறு யார்மீதும் எனக்கு கோபமும் வருத்தமும் இல்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி எங்களைச் சந்திக்க கூட தயக்கம் காட்டுகிறார். அவரை முதலமைச்சர் வேட்பாளராக எங்களால் ஏற்க முடியாது. பழனிசாமியை எதிர்த்து ஆரம்பித்ததுதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். விரைவில் செங்கோட்டையனை சந்திப்பேன். நீங்கள் நினைக்காத கூட்டணி ஒன்று அமையப்போகிறது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அதிமுக பின்னடைவை சந்திக்கும்,” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.