“சீனாவுக்கு இணையாக ஏற்றுமதி செய்யப்படும்”.. புதிய பாலிசி குறித்து அமைச்சர் கீர்த்தனா!
"நான் கொரியா சென்றிருந்தபோது சிவகாசி பட்டாசுகள் குறித்து எடுத்துரைத்தேன். அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த அவர்கள், தங்களின் நாட்டிற்கும் வருமாறு அழைப்பு விடுத்தனர். அதேபோல போலந்து நாட்டைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர், தாங்கள் 6,000 கோடி ரூபாய்க்குப் பட்டாசுகளை இறக்குமதி செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார்" என்று சர்வதேச சந்தையில் உள்ள தேவையைச் சுட்டிக்காட்டினார்.
சிவகாசி, ஜுன் 14: சீனாவுக்கு இணையாகத் தமிழ்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளுக்குப் பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். இதற்காகப் புதிய கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு, சட்டப்பூர்வமான சரியான வழிமுறைகளில் ஏற்றுமதி தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கீர்த்தனா பேசியதாவது, “உலகளவில் சீனா பல்வேறு நாடுகளுக்குப் பட்டாசுகளை ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால், நம்மிடம் மிகப்பெரிய திறமை இருந்தும் நாம் இன்னும் பெரிய அளவில் ஏற்றுமதி செய்யாமல் இருக்கிறோம். சீனாவுக்கு இணையாக நமது தமிழ்நாடும் பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய வேண்டும்” என்றார்.
இதையும் படிக்க: “விசிக எந்த நேரத்திலும் அமைச்சரவையிலிருந்து வெளியே வரலாம்”.. பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!
விருதுநகரின் தரம் உயரும்:
இதற்கான சரியான மெத்தட் எது என்பதை ஆராய்ந்து, புதிய கொள்கையை உருவாக்கி ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளோம். தூத்துக்குடி துறைமுகம் நமக்கு அருகில் இருப்பதால் மிக எளிதாக ஏற்றுமதி செய்ய முடியும். இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தின் தரமும், சிவகாசி பட்டாசுகளின் தரமும் உலகளவில் உயரும்.
பொருளாதார வளர்ச்சி:
சிவகாசி தற்போது பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உள்ளது. இந்த ஏற்றுமதி வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினால், சிவகாசியை அடுத்த கட்டத்திற்குப் பெரிய லெவலில் கொண்டு செல்ல முடியும்.
வெளிநாடுகளில் உள்ள பெரும் வரவேற்பு:
தனது வெளிநாட்டுப் பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அமைச்சர், “நான் கொரியா சென்றிருந்தபோது சிவகாசி பட்டாசுகள் குறித்து எடுத்துரைத்தேன். அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த அவர்கள், தங்களின் நாட்டிற்கும் வருமாறு அழைப்பு விடுத்தனர். அதேபோல போலந்து நாட்டைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர், தாங்கள் 6,000 கோடி ரூபாய்க்குப் பட்டாசுகளை இறக்குமதி செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார்” என்று சர்வதேச சந்தையில் உள்ள தேவையைச் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிக்க: கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவா? அவருக்கே Confidence இல்லையா? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
ஏற்றுமதி செய்ய தீவிர நடவடிக்கை:
எனவே, இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதால், மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் வழிகாட்டுதலோடு இந்த ஏற்றுமதிக் கொள்கையை எப்படிக் கொண்டு வர வேண்டும் என்பதை முறையாகப் படித்து, சிவகாசி பட்டாசுகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.