முடிவை மாற்றிய ஓபிஎஸ்.. டிச.15ல் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு.. டெல்லி பயணம் காரணமா?

டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பை நடத்தி இனியாவது திருந்த வேண்டும் என கெடு விதித்த ஓ.பன்னீர்செல்வம், இல்லாவிட்டால் திருத்தப்படுவீர்கள் என்றும் எச்சரித்தார். மேலும், எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு எங்களை தள்ளி விடாதீர்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

முடிவை மாற்றிய ஓபிஎஸ்.. டிச.15ல் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு.. டெல்லி பயணம் காரணமா?

ஓ.பன்னீர்செல்வம்

Updated On: 

13 Dec 2025 11:30 AM

 IST

சென்னை, டிசம்பர் 13: ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் டிசம்பர் 15ம் தேதி நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் டெல்லி சென்ற ஓபிஎஸ் அமித்ஷாவை சந்தித்த நிலையில், கூட்டம் ஒத்திவைக்கப்படுவது குறிப்பிடத்தக்க அரசியல் நிகர்வாக பார்க்கப்படுகிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை என பேச்சு எழுந்த போது அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ், நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அங்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது. தொடர்ந்து, அதிமுகவில் ஏற்பட்ட கட்சி பூசல் காரணமாக அந்த கட்சியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பை ஓ.பன்னீர்செல்வம் உருவாக்கினார். அதோடு, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணியில் அங்கம் வகித்து, சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி தோல்வியையும் சந்தித்தார்.

இதையும் படிக்க : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தமிழகத்தில் தொடங்கியது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சோதனை

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ்:

இதனிடையே, அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, தனக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காதது உள்ளிட்ட காரணங்களால் அந்தக் கூட்டணியில் இருந்து அவர் அதிரடியாக வெளியேறினார். அதோடு, தான் வெளியேறியதற்கு முக்கிய காரணமாக புதிதாக மாநிலத் தலைவர் பதவியில் தலைமையேற்ற நயினார் நாகேந்திரன் தான் காரணம் என்றும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார். அவர் தான் தனக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் அமித்ஷா, அண்ணாமலை உள்ளிட்ட மூத்த பாஜக நிர்வாகிகளை சந்திப்பதும், பேச்சுவார்த்தை நடத்துவதுமாக இருந்து வந்தார். இதனால், அவர் மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணையலாம் அல்லது தனிக்கட்சி தொடங்கலாம் என்று கூறப்பட்டது.

டிசம்பர் 15ம் தேதி வரை கெடு விதித்த ஓபிஎஸ்:

இதனிடையே, கடந்த நவம்பர் 24ம் தேதி சென்னை வேப்பேரியில் அதிமுக உரிமை மீட்புக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் பேசுகையில், அதிமுக 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் எனத் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருதவாக குற்றஞ்சாட்டினார். அதோடு, அதிமுகவின் இந்த நிலையை பார்த்து நாம் கண்ணீர் விடும் நிலை உள்ளதாக கூறிய அவர், வரும் டிசம்பர் 15 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட போகிறோம். எனவே டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பை நடத்தி இனியாவது திருந்த வேண்டும் என கெடு விதித்த அவர், இல்லாவிட்டால் திருத்தப்படுவீர்கள் என்றும் எச்சரித்தார். மேலும், எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு எங்களை தள்ளி விடாதீர்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அமித்ஷாவை சந்தித்து வந்த ஓபிஎஸ்:

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்தித்திருந்தார். இந்த நிலையில், தமிழகம் திரும்பிய ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா எதற்காக அதிமுகவை ஆரம்பித்து அதனை உச்சத்தில் வைத்தார்களோ, அதே நிலையில் அதிமுக தொடர வேண்டும் என்பதை அடிப்படை தொண்டனின் எண்ணமாகும். பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் ஒன்று பட வேண்டும் என்பதற்காகவே நான் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்தினேன் என்று கூறினார்.

இதையும் படிக்க : தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…அரசியல் பின்னணி என்ன!

டிச.15 ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு:

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் டிசம்பர் 15ம் தேதி நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அவர் அமித்ஷாவை சந்தித்து வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் மீண்டும் அதிமுக ஒருங்கிணைப்புக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

YouTube பார்த்து சிகிச்சை செய்து இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி; போலி டாக்டர் கைது
23 ஆண்டுகள் நீண்ட திருமணம்.. வெள்ளை பூண்டு, வெங்காயத்தால் பிரிந்த சம்பவம்..
செல்ஃபி எடுக்க முயன்று 130 அடி பள்ளத்தாக்கில் விழுந்த நபர் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
அமெரிக்காவில் மதுபோதையில் காரை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணம் - இந்திய வம்சாவளி இளைஞர் கைது