இப்படி ஒரு ஆட்சி நடத்த முதல்வர் விஜய்க்கு அருகதை உள்ளதா – எடப்பாடி பழனிசாமி காட்டம்..
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியுடனும் எழுச்சியுடனும் இருக்கின்றனர். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. அதிமுகவை அழித்துவிடலாம் என்று சிலர் நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது என பேசியுள்ளார்.
ஜூலை 1, 2026: அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியுடனும் எழுச்சியுடனும் இருப்பதாக, சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுகவைப் பொறுத்தவரை, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இந்தச் சூழலில், கட்சி இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்ட நிலையில், சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுகவைச் சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இரண்டாக பிரிந்து செயல்பட்ட அதிமுக:
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில், அதிமுக மீண்டும் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கியது. அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டவர்களின் கட்சிப் பொறுப்புகள் நீக்கப்பட்டு, பின்னர் மீண்டும் அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டன.
மேலும் படிக்க: எடப்பாடி பழனிசாமி அளித்த பதவி வேண்டாம்… எஸ். பி. வேலுமணி தரப்பு அதிரடி அறிக்கை!
இந்த நிலையில், எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட சில மூத்த நிர்வாகிகள் மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், அதிமுகவைச் சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் இதுவரை ராஜினாமா செய்துள்ளனர். ஏற்கனவே நான்கு எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் ஸ்ரீ விஜயபாஸ்கர் ஆகியோரும் நாளை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி:
மேலும், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட ஒன்பது பேர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக தலைமையை ஏற்று மீண்டும் செயல்படத் தொடங்கிய பிறகும், நாங்கள் வகித்த பொறுப்புகள் எங்களுக்கு மீண்டும் வழங்கப்படவில்லை. சிலரின் விருப்பப்படி மட்டுமே பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் எங்களுக்கு தேவையில்லை. அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களாகவே தொடர்ந்து செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளனர்.
இப்படி ஒரு ஆட்சி – முதல்வர் விஜய்க்கு அருகதை உள்ளதா?
இந்தச் சூழலில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியுடனும் எழுச்சியுடனும் இருக்கின்றனர். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. அதிமுகவை அழித்துவிடலாம் என்று சிலர் நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.
மக்கள் அதிமுகவுக்குத்தான் வாக்களித்து, ஒவ்வொருவரையும் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்துள்ளனர். கட்சியின் சின்னத்தில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்த சில அரசியல் சக்திகள், வேறு கட்சிகளுக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றன. இவ்வாறு ஒரு ஆட்சியை நடத்த முதலமைச்சர் விஜய்க்கு அருகதை உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.