குமரியில் அணுகனிம சுரங்க திட்டம்.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம் – வலுக்கும் கண்டனங்கள்..
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுகனிம சுரங்கத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக 1,144.0618 ஹெக்டேர் பரப்பளவிலான நிலம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நில ஒதுக்கீட்டிற்கான அரசாணையின் காலக்கெடு நிறைவடைய இருந்த நிலையில், அதன் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
ஜூலை 1, 2026: கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுகனிம சுரங்கத் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்த தமிழக வெற்றிக் கழக அரசு, தற்போது அதே திட்டத்திற்கான நில ஒதுக்கீட்டை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்திருப்பது அரசின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
குமரியில் அணுகனிம சுரங்க திட்டம்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுகனிம சுரங்கத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக 1,144.0618 ஹெக்டேர் பரப்பளவிலான நிலம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நில ஒதுக்கீட்டிற்கான அரசாணையின் காலக்கெடு நிறைவடைய இருந்த நிலையில், அதன் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய அரிய மண்வளங்கள் நிறுவனம் (IREL) கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுகனிம சுரங்கத் திட்டத்தை மீண்டும் முன்னெடுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் இந்த விவகாரம் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
Also Read: அதிமுகவில் வளர்மதி பதவி பறிப்பு.. எடப்பாடி கே. பழனிசாமி அதிரடி உத்தரவு!
தேர்தலுக்கு முன் வேறு நிலைப்பாடு – ஆட்சிக்கு வந்த பின் வேறு நிலைப்பாடு:
குறிப்பாக, எதிர்க்கட்சியாக இருந்தபோது அணுகனிம சுரங்கத் திட்டம் சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி தமிழக வெற்றிக் கழகம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தது. மேலும், இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களிலும் கருத்துகளிலும் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தது.
ஆனால், தற்போது ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அதே திட்டத்திற்கான நில ஒதுக்கீட்டை நீட்டிக்கும் வகையில் அரசாணை வெளியிட்டிருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பு கூறிய நிலைப்பாட்டுக்கும், தற்போது அரசின் நடவடிக்கைக்கும் இடையே முரண்பாடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் இந்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்:
கன்னியாகுமரி அணுக்கணிம சுரங்க திட்டம்!
அப்போது எதிர்ப்பு!
தற்போது ஆதரவு!சொன்னதை செய்வோம்!
செய்வதை மட்டும்தான் சொல்வோம்..இந்த வசனம் நியாபகம் இருக்கிறதா!
இல்லை செயற்குழுவில் போட்ட தீர்மானம்தான் மறந்துவிட்டதா!@actorvijay
நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்…… pic.twitter.com/yBN0qcUz6W
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) July 1, 2026
இதுதொடர்பாக அதிமுக தொழில்நுட்பப் பிரிவு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி அணுகனிம சுரங்கத் திட்டம்… அப்போது எதிர்ப்பு; தற்போது ஆதரவு. ‘சொன்னதை செய்வோம், செய்வதை மட்டுமே சொல்வோம்’ என்ற வசனம் ஞாபகம் இருக்கிறதா? இல்லை, செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானம்தான் மறந்துவிட்டதா? நல்லா இருக்கு சார்… உங்க மாற்றம்!” எனக் குறிப்பிட்டு தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.