AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

125 நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்.. விதிகளில் மாற்றம் கோரி பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

கடிதத்தில், புதிய திட்டத்தின் தற்போதைய நிதிப் பகிர்வு முறை தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 கோடிக்கும் அதிகமான கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஊதியம், கட்டுமானப் பொருட்கள் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்கு ஒன்றிய-மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் செலவிட வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது.

125 நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்.. விதிகளில் மாற்றம் கோரி பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 01 Jul 2026 20:20 PM IST

ஜூலை 1, 2026: மத்திய அரசு இன்று முதல் அமல்படுத்தியுள்ள ‘விக்சித் பாரத் – ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம்’ (VB-G RAM G) திட்டத்தின் நிதிப் பகிர்வு மற்றும் செயல்பாட்டு விதிகளில் முக்கிய மாற்றங்கள், தளர்வுகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நிதிப் பகிர்வில் மாற்றம் அவசியம்:

கடிதத்தில், புதிய திட்டத்தின் தற்போதைய நிதிப் பகிர்வு முறை தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 கோடிக்கும் அதிகமான கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஊதியம், கட்டுமானப் பொருட்கள் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்கு ஒன்றிய-மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் செலவிட வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளை முழுமையாக (100%) ஒன்றிய அரசே ஏற்க வேண்டும் என்றும், கட்டுமானப் பொருட்களுக்கான செலவை 75:25 என்ற விகிதத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும்:

கிராம ஊராட்சிகளை வகைப்படுத்துதல் மற்றும் நிதி ஒதுக்கீட்டுக்கான ஒரே மாதிரியான மத்திய வழிகாட்டுதல்கள், மாநிலங்களின் சமூக-பொருளாதார வேறுபாடுகளை கருத்தில் கொள்ளவில்லை என்றும், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீட்டு முறையை வகுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க: குமரியில் அணுகனிம சுரங்க திட்டம்.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம் – வலுக்கும் கண்டனங்கள்..

ஒவ்வொரு ஆண்டும் விதைப்பு மற்றும் அறுவடை காலத்தை உள்ளடக்கிய 60 நாட்களை முன்கூட்டியே நிர்ணயிக்கும் நடைமுறைக்கு பதிலாக, ‘எல் நினோ’ போன்ற காலநிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப அந்த 60 நாட்களை மாற்றி அறிவிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

மாநில வீட்டுவசதித் திட்டங்களையும் இணைக்க வேண்டும்:

மத்திய அரசின் ஊரக வீட்டுவசதித் திட்டங்களுடன் ஒருங்கிணைப்பு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசின் வீட்டுவசதித் திட்டங்களும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் “அனைவருக்கும் வீடு” என்ற தமிழ்நாடு அரசின் இலக்கை விரைவாக அடைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான ஒப்புதல் அதிகாரத்தை ஒன்றிய அரசிடம் இருந்து மாநில அரசுகளுக்கு வழங்கினால் நிர்வாக தாமதங்கள் தவிர்க்கப்பட்டு திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி பெயரை தொடர வேண்டும்:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) என்ற பெயருக்கு மக்களிடையே நன்மதிப்பு இருப்பதால், புதிய திட்டத்திலும் மகாத்மா காந்தியின் பெயரை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு ஊரக வேலைவாய்ப்புத் திட்டங்களை செயல்படுத்துவதில் தேசிய அளவில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ள முதல்வர், மேற்கண்ட திருத்தங்கள் செய்யப்பட்டால் புதிய திட்டத்தை கிராமப்புற மக்களுக்கு அதிக பயன் அளிக்கும் வகையில் திறம்பட செயல்படுத்த முடியும் என்றும், தனது கோரிக்கைகளை பிரதமர் பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பை வழங்கி வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGS) மாற்றாக, 125 நாட்கள் வேலைவாய்ப்பை வழங்கும் ‘விக்சித் பாரத் – ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம்’ (VB-G RAM G) திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டம் இன்று (ஜூலை 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

Follow Us