AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறைகளில் ஒப்பந்த மோசடி.. பணம் பெற்றவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..

புகார் அளிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும். அவர்களின் அடையாளம் எந்த நிலையிலும் வெளிப்படுத்தப்படாது. மேலும், அவர்களுக்குத் தேவையான அனைத்து சட்டப் பாதுகாப்பும் வழங்கப்படும். அவர்கள் இழந்த பணத்தை மீட்டுத் தருவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும். புகார்களின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறைகளில் ஒப்பந்த மோசடி.. பணம் பெற்றவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 01 Jul 2026 17:33 PM IST

ஜூலை 1, 2026: பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி புகார் அளிக்கலாம் என்றும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதி அர்ஜுனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஊழலற்ற ஆட்சி – பல்வேறு நடவடிக்கைகள்:

“தமிழ்நாடு அரசின் நிர்வாகம் முதலமைச்சரின் தலைமையில் மிக நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட்டு வருகிறது. அனைத்து அரசுத் துறைகளிலும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யவும், ஊழலற்ற ஆட்சியை நிலைநிறுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் ஊழல்:

ஆனால், கடந்த ஆட்சிக் காலங்களில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் மையப்படுத்தப்பட்ட ஊழல்கள், திட்டமிட்ட விதிமீறல்கள், நிர்ணயிக்கப்பட்ட லஞ்சத் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக, அரசின் ஒப்பந்தப் பணிகளை பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் இருந்து பெருமளவில் பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அந்தப் பணிகளை வழங்காமல் பல ஒப்பந்ததாரர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு நெருக்கமாக செயல்பட்டவர்கள் உள்ளிட்ட பலர், தங்களுக்கு அரசுத் துறையில் செல்வாக்கு இருப்பதாகக் கூறி, ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து பல ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. ஆனால், பணம் பெற்ற பிறகும் பலருக்கு எந்த ஒப்பந்தமும் வழங்கப்படாமல் அவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தவெக ஆட்சி கவிழ்ப்பு விவகாரம்.. கைதான 3 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல்..!

புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்:

இதுதொடர்பாக எங்களுக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. மேலும், இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களோ அல்லது ஒப்பந்தம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களோ, தயக்கமின்றி தங்களது புகார்களை அளிக்கலாம்.

பாதிக்கப்பட்டவர்கள் என்னிடமோ அல்லது லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) காவல்துறையினரிடமோ புகார் அளிக்கலாம். மேலும், என்னிடம் நேரடியாகவோ அல்லது minister.pwd.hd.tn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ புகார்களை அனுப்பலாம்.

சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்:

புகார் அளிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும். அவர்களின் அடையாளம் எந்த நிலையிலும் வெளிப்படுத்தப்படாது. மேலும், அவர்களுக்குத் தேவையான அனைத்து சட்டப் பாதுகாப்பும் வழங்கப்படும். அவர்கள் இழந்த பணத்தை மீட்டுத் தருவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும். புகார்களின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இனிவரும் காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாத வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அனைத்து ஒப்பந்தங்களும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, நேர்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் மட்டுமே வழங்கப்படும். அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேலும் வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us