அதிமுகவில் அடுத்த அதிரடி.. புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்… எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
AIADMK New Secretaries : தவெக அரசுக்கு ஆதரவளித்தாக அதிமுகவில் 17 மாவட்ட செயலாளர்கள் நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்களை எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். அவர்கள் யார் என்ன என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக்கழக அரசு இன்று புதன்கிழமை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், அதிமுகவில் உள் கட்சி மோதலால் தனி குழுவாக செயல்பட்டு வரும் முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர். இந்த நிலையில், மாவட்ட செயலாளர்களான நத்தம் விஸ்வநாதன், எஸ். பி. வேலுமணி, சி. வி. சண்முகம் உள்ளிட்டோரை கட்சிப் பதவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மேலும், நீக்கம் செய்யப்பட்ட கட்சி இடங்களில் புதிய மாவட்ட செயலர்களை நியமித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ( பழைய பதவி அடைப்புக்குறிக்குள்) :
விழுப்புரம் – புதுக்கோட்டை மாவட்ட செயலாளர்கள்
விழுப்புரம் மாவட்ட செயலாளராக ஆர். பசுபதி (மருதூர்மேடு விழுப்புரம் தெற்கு நகரம்), கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக வேலுசாமி (அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர்), புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளராக பழனிவேல் (மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்), நாமக்கல் மாவட்ட செயலாளராக கே. பி. பி. பாஸ்கர் (நாமக்கல் நகர கழக செயலாளர்), திருவாரூர் மாவட்ட செயலாளராகக ஆர். டி. மூர்த்தி (எ) தட்சிணாமூர்த்தி (திருவாரூர் நகர கழக செயலாளர்), திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக கே. எஸ். ரவிசந்திரன் (பூவிருந்தவல்லி நகர கழக செயலாளர்), ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக ஏ. பி. எஸ். லோகநாதன் (மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் வார்டு உறுப்பினர் அரக்கோணம் ஒன்றியம்).
மேலும் படிக்க: அரசியல் ரீதியாக பதிவிடும் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – தமிழக அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை
ராணிப்பேட்டை – ஈரோடு மாவட்ட செயலர்கள்
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக சுமைதாங்கி சி. ஏழுமலை ( மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ), திருப்பத்தூர் மாவட்ட செயலாளராக பசுபதி (மருத்துவர் அணி துணை செயலாளர்), கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக தாமோதரன் (அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் முன்னாள் அமைச்சர்), கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளராக ராமு (மாவட்ட இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை செயலாளர்), ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக மனோகரன் (பெரியார் நகர் பகுதி கழக செயலாளர்), நீலகிரி மாவட்ட செயலாளராக பால நந்தகுமார் ( எம். ஜி. ஆர். இளைஞர் அணி இணை செயலாளர்).
திருச்சி – திருநெல்வேலி மாவட்ட செயலர்கள்
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளராக கார்த்திகேயன்(மாவட்ட புரட்சித்தலைவி பேரவை செயலாளர்), கரூர் மாவட்ட செயலாளராக கமலக்கண்ணன் (கரூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர்), தேனி மேற்கு மாவட்ட செயலாளராக நாராயணசாமி (கொள்கை பரப்பு துணை செயலாளர்), திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளராக ராமசுப்பிரமணியன் (பாளையங்கோட்டை வடக்கு ஒன்றிய கழக செயலாளர்) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: நீட் தேர்வை ரத்து செய்க – மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்