செங்கல் சூளை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டல்.. தவெக நிர்வாகி பதவி பறிப்பு.. கட்சி தலைமை அதிரடி!
Vellore TVK Union Secretary Removed: வேலூர் மாவட்டத்தில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாதம் ரூ.1 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டல் விடுத்த கணியம்பாடி கிழக்கு ஒன்றிய தவெக செயலாளர் விஜயகுமார் கட்சியின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் அருகே உள்ள கணியம்பாடி புதூர் கிராமத்தை சேர்ந்த தினகரன், சுமன், சண்முகம், ரமேஷ், சுனில் குமார் ஆகியோர் அதே பகுதியில் செங்கல் சூளை வைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்த செங்கல் சூலையில் கணியம்பாடி கிழக்கு ஒன்றிய தவெக செயலாளர் விஜயகுமார் தலைமையிலான நிர்வாகிகள் ஈஸ்வரன் மற்றும் லோகேஷ் ஆகியோர் சென்று அதன் உரிமையாளர்களிடம் மாதம் தோறும் ரூ.1 லட்சம் மாமூல் தரவேண்டும் என்று மிரட்டியதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், கடந்த 22- ஆம் தேதி செங்கல் சூளை பகுதிக்கு சென்றிருந்த தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளை, செங்கல் சூளையின் உரிமையாளர் உள்ளிட்டோர் மடக்கி பிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த விவகார தொடர்பாக தவெகவினர் மீது வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் செங்கல் சூளை உரிமையாளர்கள் புகார் அளித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வந்தன.
கணியம்பாடி கிழக்கு தவெக ஒன்றிய செயலர் நீக்கம்
இந்த நிலையில், கணியம்பாடி தவெக கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டு கட்சியின் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனிடையே, தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அதில், அந்த பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெற்று வருவதாகவும், உரிய அனுமதி இல்லாமல் செங்கல் சூளைகளுக்கு லாரிகளில் மண் கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.
மேலும் படிக்க: மேகதாது அணை விவகாரம்.. சட்ட நடவடிக்கைகள் விரைந்து எடுக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தல்..




மணல் கடத்தல் லாரிகளை பிடித்து அதிகாரிகள் எச்சரிக்கை
மேலும், மணல் திருட்டின் போது வீடியோ எடுத்தும், கனிமவளத்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்திருந்தோம். அதன்படி, அதிகாரி வந்தபோது, புகாருக்கு உள்ளான செங்கல் சூளைகளை காண்பிக்க சொன்ன காரணத்தால் அவர்களுடன் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் உடன் சென்றனர். அப்போது, அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை அதிகாரிகள் மடித்து பிடித்து எச்சரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் அங்கிருந்து சென்ற பின்னர் வேண்டுமென்றே மாமுல் கேட்டு வந்ததாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது ஆதாரம் இன்றி பலி சுமத்துகிறார்கள் என்று தெரிவித்திருந்தனர்.
தவெக சார்பில் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்
மேலும், கனிம வளம் திருட்டை தடுத்ததால் மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியதாக செங்கல் சூளை உரிமையாளர்கள் மீதும் தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தரப்பை சேர்ந்தவர்கள் வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பக்ரீத் – வார இறுதி நாள்.. மக்களே சொந்த ஊர் போறீங்களா? இன்று முதல் 4,195 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!