350 பேரன் – பேத்திகளுடன் 108- ஆவது பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டி.. தருமபுரியில் ருசிகர நிகழ்வு!
Dharmapuri Elderly Woman Celebrated 108th Birthday: தருமபுரி மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் தனது மகன்கள், மகள்கள், 350 பேரன், பேத்திகள் ஆகியோருடன் சேர்ந்து 108- ஆவது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடி உள்ளார். மேலும், அவருக்கு குரு பூஜையும் நடத்தப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் 108 வயதை பூர்த்தி செய்த மூதாட்டி ஒருவருக்கு மகன்கள், மகள்கள், 350 பேரக் குழந்தைகள் என 5 தலைமுறையினர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி உள்ளனர். இந்த மூதாட்டியின் பெயர் புட்டியம்மாள். இவரது கணவர் பெயர் காலன். இவர், காலமான நிலையில், புட்டியம்மாள் தனது மகன்கள், மகள்கள் ஆதரவுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், மூதாட்டி புட்டியம்மாள் பிறந்த நாள் தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக, அந்த மூதாட்டியின் பேரன் கூறியதாவது: எனது பாட்டிக்கு 108 வயது ஆகிறது. இதை முன்னிட்டு பாட்டியின் மகன்கள், மகள்கள், 350 பேரன், பேத்திகள் என அனைவரும் சேர்ந்து கனகாபிஷேகம் என்ற குரு பூஜையை நடத்தி உள்ளோம். 5 தலைமுறைகளை பார்த்துள்ள எனது பாட்டிக்கு எந்தவித உடல் நல குறைவும் இல்லாமல் தற்போது வரை ஆரோக்கியமாக இருந்து வருகிறார்.
குரு பூஜையில் 450 குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்பு
எங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் எங்களது பாட்டியே தெய்வமாக நினைத்து வழிபட்டு வருகிறோம். தற்போது நடைபெற்ற கனகாபிஷேகத்தில் சுமார் 450 குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். எனது பாட்டியின் பிறந்த நாளையொட்டி, காலையில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, மகன் மகள்கள் சார்பில் பாட்டிக்கு புத்தாடை, நெக்லஸ், கம்மல், மூக்குத்தி, வளையல், செயின், காசு மாலை, காப்பு உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
மேலும் படிக்க: சட்டம்-ஒழுங்கு பிரச்சனை.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய முதல்வர் விஜய்.. டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு!
கனகாபிஷேகம் என்னும் குரு பூஜை விழா
இதைத் தொடர்ந்து, பாட்டியிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக கனகாபிஷேகம் எனும் குருபூஜை நடத்தப்பட்டது. பின்னர், எனது பாட்டியின் மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள் என அனைவரும் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுள்ளோம். எனது பாட்டி புட்டியம்மாளுக்கு 2 மகன்கள், 4 மகள்கள், 350 பேரன், பேத்திகள் உள்ளனர். இந்த வயதிலும் எனது பாட்டி தானாகவே உணவு சாப்பிடுகிறார்.
எனது பாட்டியின் வெகு நாள் ஆசை நிறைவேற்றம்
யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக நடந்து சென்று வருகிறார். ஆரோகியமாக இருக்கிறார். எனது பாட்டிக்கு குருபூஜை நடத்த வேண்டும் என்று வெகு நாளாக ஆசை இருந்து வந்தது. அந்த ஆசை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த விழாவில் மூதாட்டியின் குடும்பத்தினர் அதிகளவில் பங்கேற்றிருந்தனர். 350 பேரக் குழந்தைகளுடன் 108 வயதில் மூதாட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க: விரைவில் பள்ளிகள் திறப்பு: மாணவர்களே ஸ்கூலுக்கு போக ரெடியா?

