சட்டம்-ஒழுங்கு பிரச்சனை.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய முதல்வர் விஜய்.. டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு!
Law and Order Crisis: இந்த ஆலோசனை கூட்டத்தின் வாயிலாகத் தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைப் பலப்படுத்த பல்வேறு அறிவுரைகளையும் உத்தரவுகளையும் முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு வழங்கி வருகிறார். அந்தவகையில், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து, முதலமைச்சர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார். கடந்த சில தினங்களாகத் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து இந்த அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவையில் சமீபத்தில் நடந்த சிறுமி படுகொலைச் சம்பவத்தின் எதிரொலியாகவே, சட்டம்-ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டுவர முதலமைச்சர் விஜய் இந்த முக்கிய ஆலோசனையைத் தொடங்கியுள்ளார்.
இதையும் படிக்க: “தவெக ஆட்சி நீடிக்க ஸ்டாலின் சாமியை வேண்டிக்கொள்ள வேண்டும்”.. அமைச்சர் அருண்ராஜ்
கடந்த சில நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் பல கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனிப்பட்ட விரோதம் மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக இக்குற்றங்கள் நடந்திருந்தாலும், அடுத்தடுத்து நிகழ்ந்த இக்கொலைகள் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்த அச்சத்தைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதுவே இக்கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டதற்கான முக்கியக் காரணமாகும்.
‘சிங்கப்பெண்’ திட்டம் தொடக்கம்:
தேர்தல் வாக்குறுதியின் போதுபெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ உருவாக்கப்படும் என விஜய் அறிவித்திருந்தார். தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்தை உடனடியாகச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இத்திட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வரும் விதமாக, வரும் நாட்களில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மாலையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் விஜய் இதனைத் தொடங்கி வைக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது சிங்கப்பெண் படையில் எந்தெந்த பெண் அதிகாரிகளை நியமிப்பது, அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், மாவட்ட வாரியாகப் பெண்கள் பாதுகாப்பை அவர்கள் எப்படி உறுதி செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவான நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகள்:
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.#CMJosephVijay pic.twitter.com/dKyZufcDZP
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 25, 2026
இந்த ஆலோசனை கூட்டத்தின் வாயிலாகத் தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைப் பலப்படுத்த பல்வேறு அறிவுரைகளையும் உத்தரவுகளையும் முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு வழங்கி வருகிறார். அந்தவகையில், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படா வண்ணம் முன்கூட்டியே போலீசாரின் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது போலீசார் எவ்விதத் தாமதமும் இன்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தின் முடிவில், கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: சர்ச்சையான அந்த சிரிப்பு.. பின்னணி இதுதான்.. ஓப்பனாக பேசிய அமைச்சர் கீர்த்தனா!