திமுக தேர்தல் தோல்வி.. சேகர்பாபு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.. உண்மையை உடைத்த ஆய்வு குழு!!
தேர்தல் தோல்விக்குச் சேகர்பாபு மீதான அதிருப்தி மட்டுமின்றி, அரசின் சில திட்டங்கள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளும் முக்கியக் காரணங்களாக அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த பல பெண்களுக்குப் போதிய எண்ணிக்கையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போய்ச் சேராததால், பெண்கள் மத்தியில் அரசு மீது பெரும் அதிருப்தி நிலவியது.
சென்னை, ஜுன் 12: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து ஆராய திமுக தலைமை அமைத்திருந்த ஆய்வுக்குழு, தனது அதிரடி அறிக்கையைக் கட்சித் தலைமையிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான புகார்களும், கட்சியின் தோல்விக்கான பல்வேறு அதிரடி காரணங்களும் முன்வைக்கப்பட்டுள்ளதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக ஆய்வு குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நிலவிய அதிருப்திகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: தமிழக விவசாயிகளுக்கு வந்தது குட் நியூஸ்.. முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவிப்பு!!
வேண்டியவர்களுக்கு மட்டுமே பொறுப்பு:
கட்சியில் நீண்ட நாட்களாக உழைத்தவர்களை விடுத்து, தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே பொறுப்புகள் வழங்கியதாகச் சேகர்பாபு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு அறநிலையத்துறையிலும், கட்சியின் பிற பிரிவுகளிலும் முக்கியப் பொறுப்புகளை வழங்கி முன்னுரிமை அளித்தார் என்ற புகாரும் எழுந்துள்ளது. அரசின் பல்வேறு நியமனப் பொறுப்புகளில், உண்மையாக உழைத்த திமுக கட்சியினருக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விஜய்யின் செல்வாக்கை கணிக்காத நிர்வாகிகள்:
அரசியல் களத்தில் புதிய அலையை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, மக்களிடையேயும் குறிப்பாக மகளிர் மத்தியிலும் இருந்த அசுரத்தனமான செல்வாக்கை திமுக மாவட்ட நிர்வாகிகள் தவாறாகக் கணித்துவிட்டனர் அல்லது முற்றிலுமாகக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர் என்று ஆய்வு குழு அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது.
திமுக தோல்விக்கான பிற முக்கியக் காரணங்கள்:
தேர்தல் தோல்விக்குச் சேகர்பாபு மீதான அதிருப்தி மட்டுமின்றி, அரசின் சில திட்டங்கள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளும் முக்கியக் காரணங்களாக அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த பல பெண்களுக்குப் போதிய எண்ணிக்கையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போய்ச் சேராததால், பெண்கள் மத்தியில் அரசு மீது பெரும் அதிருப்தி நிலவியது. கட்சியில் இருந்த இளைஞர்களின் உழைப்பையும், ஆற்றலையும் போதுமான அளவுக்குத் தேர்தல் பணிகளில் பயன்படுத்தத் தவறிவிட்டனர்.
இதையும் படிக்க: ‘தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’.. அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தீவிரமெடுக்கும் விவசாயிகள் போராட்டம்!!
அமைச்சர்களின் உதவியாளர்கள் முட்டுக்கட்டை:
பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் தங்களது குறைகளை அமைச்சர்களிடம் நேரடியாகக் கொண்டு செல்ல முடியாதபடி, அமைச்சர்களின் உதவியாளர்களே பெரும் முட்டுக்கட்டையாகச் செயல்பட்டுள்ளனர். கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல்கள் முறைப்படி நடத்தப்படாததால், அடிமட்ட அளவில் இருந்த கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர். திமுக தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த விரிவான ஆய்வறிக்கையின் அடிப்படையில், தோல்விக்குக் காரணமான மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது கட்சித் தலைமை கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.