மா.சுப்பிரமணியனை தோற்கடித்த சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு நல்ல சாவே வராது – ஆர்.எஸ் பாரதி சர்ச்சை பேச்சு..
சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன் கொண்டு வந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அனைவரும் வாக்களித்திருந்தால் கூட நாம் வெற்றி பெற்றிருப்போம். அவர்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது என வெளிப்படையாகச் சொல்கிறேன். உயிரைக் காப்பாற்றுவது என்பது அவ்வளவு கஷ்டமான காரியம். எத்தனை பேருடைய உயிரைக் காப்பாற்றியிருப்பார் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்” என பேசியுள்ளார்.
ஆகஸ்ட் 14, 2026: சைதாப்பேட்டை தொகுதியில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியனை தோற்கடித்த வாக்காளர்களை விமர்சித்து, “அவர்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காரப்பாக்கத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறியதாக குறிப்பிட்டார்.
திமுக கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ் பாரதி:
அப்போது, “1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை இவ்வளவு சாதனைகளைச் செய்தும் தேர்தலில் தோற்றுவிட்டீர்களே என கலைஞரிடம் கூறியபோது, அவர் மிகுந்த உற்சாகத்துடன், ‘அடுத்த தேர்தல் வருகிறது. அதில் வெற்றி பெறுவதற்கு இப்போதுதான் வாய்க்கால் வெட்டிக்கொண்டிருக்கிறோம். தண்ணீர் தானாக வரும். ஐந்து ஆண்டுகள் கழித்து தண்ணீர் வரும். நாங்கள் வெட்டுகிற பாதையில் வரும்’ என்று கூறினார். அதைத்தான் இன்று நானும் சொல்கிறேன்” என ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வீட்டு வரி உயர்வு குறித்து பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை என கூறிய அவர், திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களையும் சுட்டிக்காட்டி பேசினார்.
சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு நல்ல சாவே வராது:
தொடர்ந்து பேசிய அவர், “சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன் கொண்டு வந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அனைவரும் வாக்களித்திருந்தால் கூட நாம் வெற்றி பெற்றிருப்போம். அவர்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது என வெளிப்படையாகச் சொல்கிறேன். உயிரைக் காப்பாற்றுவது என்பது அவ்வளவு கஷ்டமான காரியம். எத்தனை பேருடைய உயிரைக் காப்பாற்றியிருப்பார் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்” என பேசியுள்ளார்.
மேலும் படிக்க: வழக்குகளில் இருந்து தப்பிக்க திமுக பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளது – அமைச்சர் நிர்மல் குமார்..
இனி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டாம் – கட்சிக்கு செய்தால் போதும்:
மேலும், “மக்கள் தங்கள் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளனர். சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியனைப் போல் யாரும் வேலை செய்திருக்க மாட்டார்கள். இனிமேல் மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம். கட்சிக்காரர்களுக்காக மட்டும் செய்தால் போதும். இனி ஐந்து ஆண்டுகள் நாம் ஓய்வெடுத்திருக்கலாம்” என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சைதாப்பேட்டை தொகுதி வாக்காளர்களை விமர்சிக்கும் வகையில், “நல்ல சாவே வராது” என பொது மேடையில் அவர் பேசியதாக கூறப்படும் கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: கரூர் வழக்கு.. “வேலை கொடுப்பதை எதிர்க்க நீங்கள் யார்?”.. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!!
2026ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, சென்னை மாநகரில் திமுக கடும் பின்னடைவை சந்தித்த நிலையில், சென்னை திமுகவின் கோட்டையாக இருந்து வந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த தேர்தல் தோல்விக்குப் பின்னர், சென்னையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாக வெளியாகியுள்ள இந்தக் கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.