வழக்குகளில் இருந்து தப்பிக்க திமுக பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளது – அமைச்சர் நிர்மல் குமார்..
“ஆட்சியில் தற்போது திமுக இல்லை. எனவே, வழக்குகளில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், ஊழல் மூலம் சேர்த்த பணத்தை பாதுகாக்கவும் திமுக பாஜகவின் கொத்தடிமையாக மாறிவிட்டது. திமுகவினர் யாருடன் பேசினாலும், அதற்குப் பின்னால் அரசியல் நோக்கம் உள்ளது” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஆகஸ்ட் 14, 2026: சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக தற்போது பாஜகவுடன் நேரடி கூட்டணி வைத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த மரபுவழி தேநீர் விருந்தில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பங்கேற்றது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து கனிமொழி விளக்கம் அளித்திருந்த நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் அதனை விமர்சித்துப் பேசினார்.
திமுக பாஜக நேரடி கூட்டணி வைத்துள்ளது – அமைச்சர் நிர்மல் குமார்:
அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், “சபாநாயகரை சந்தித்தது நாடாளுமன்ற நிர்வாகம் மற்றும் இருக்கை ஒதுக்கீடு தொடர்பான வழக்கமான நடைமுறை என கனிமொழி கூறியுள்ளார். ஆனால், நாடாளுமன்றக் கூட்டத்தொடரே முடிந்துவிட்ட நிலையில், இருக்கை மாற்றம் தொடர்பாக இப்போது ஏன் பேச வேண்டும்? தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு சென்றுதான் இருக்கை மாற்றம் குறித்து கனிமொழி பேச வேண்டுமா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “திமுகவும் பாஜகவும் முன்பு மறைமுக கூட்டணியில் இருந்த நிலையில், தற்போது நேரடியாக கூட்டணியில் உள்ளனர். 2001ஆம் ஆண்டு இருந்த சூழல் மீண்டும் உருவாகியுள்ளது. பாஜகவுக்கு தமிழ்நாட்டில் முதன்முறையாக அரசியல் அங்கீகாரம் பெற்றுத் தந்தது திமுகதான். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து வாக்களிப்போம் என திமுக இதுவரை கூறவில்லை” என்றார்.
வழக்குகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள திமுக கூட்டணி வைத்துள்ளது:
“ஆட்சியில் தற்போது திமுக இல்லை. எனவே, வழக்குகளில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், ஊழல் மூலம் சேர்த்த பணத்தை பாதுகாக்கவும் திமுக பாஜகவின் கொத்தடிமையாக மாறிவிட்டது. திமுகவினர் யாருடன் பேசினாலும், அதற்குப் பின்னால் அரசியல் நோக்கம் உள்ளது” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
காவிரி நீர் விவகாரம் குறித்து பேசிய அமைச்சர், “கர்நாடகா தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க மறுத்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கர்நாடகா இன்னும் 37 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டியுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும்” என்றார்.
திமுக ஆட்சியில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு:
தொடர்ந்து பேசிய அவர், “திமுக ஆட்சியில் டாஸ்மாக் முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன. கட்சி நிதி பெற்றதற்கான ஆவணங்களும் உள்ளதால், திமுக தப்ப முடியாது. கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது” என்றார்.
மேலும், “ஒரு மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.10-ஐ தடுத்தது, வாகனங்களின் ஃபேன்சி எண்கள் ஏலம் விடப்படுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் வருவாய் தற்போது நேரடியாக அரசுக்கு வருகிறது. இதன் மூலமாக ரூ.15 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் திரட்டப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்” என்றார்.
முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து விளக்கம்
தமிழகத்தில் முதலீடுகள் தொடர்பாக பேசிய அமைச்சர், “தொழில் முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய உகந்த மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய காத்திருந்த பல நிறுவனங்கள் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முதலீட்டை தொடங்கியுள்ளன. தற்போது குடும்பமாக இணைந்து முதலீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யும் நிலை இல்லை. திமுக ஆட்சியில் தனியாக ஒரு முதலீட்டு ஒப்பந்தத்தை குடும்பத்துடன் அமர்ந்து மேற்கொள்ளும் நிலை இருந்தது” என விமர்சித்தார்.
தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் மாமல்லபுரம் அருகே நடைபெற உள்ளதாகவும், தமிழக அரசு வழங்கிய அட்டவணைப்படியே கூட்டம் நடைபெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க: கரூர் வழக்கு.. “வேலை கொடுப்பதை எதிர்க்க நீங்கள் யார்?”.. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!!
தமிழகத்தில் எங்கும் சொத்துவரி உயர்த்தப்படவில்லை:
சொத்துவரி குறித்து அமைச்சர் கூறுகையில், “தமிழகத்தில் தற்போது எங்கும் சொத்துவரி உயர்த்தப்படவில்லை. சொத்துவரி தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திமுக ஆட்சியில் தவறான கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டிய இடத்தில் ரூ.1 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சொத்துவரியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன” என்றார்.
திமுக–பாஜக கூட்டணி குறித்து தொடர் விமர்சனம்:
“திருச்சி சிவா மத்திய அமைச்சராவார் என அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதை திருச்சி சிவா கூட மறுக்கவில்லை. இங்கு ஒன்று, அங்கு ஒன்று என பேசுவது திமுகவின் இயல்பு. தொகுதி மறுவரையறை மசோதாவை தமிழகத்தில் எதிர்க்கும் திமுக, நாடாளுமன்றத்தில் அதனை ஆதரிக்க மாட்டோம் என ஏன் இதுவரை கூறவில்லை?” எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
மேலும், “திமுக ஆட்சிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகதான் தற்போது போராட்டம் நடத்துகிறது. ஆனால், சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக திமுகவினர் பேசுகின்றனர். அதேபோல், திமுகவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். தன்னுடன் எத்தனை பேர் கட்சியில் உள்ளனர் என்பதை காட்டுவதற்காகவே எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்துகிறார்” என விமர்சித்தார்.
மேலும் படிக்க: ‘இந்தியா’ கூட்டணியில் இல்லை!.. சபாநாயகர் தேநீர் விருந்து சர்ச்சை குறித்து கனிமொழி எம்.பி. விளக்கம்!
கோவை மாணவர் கொலை வழக்கில் நடந்தது என்ன?
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் போதைப்பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் இருந்ததாக அமைச்சர் குற்றம்சாட்டினார். கோவையில் சீனியர்–ஜூனியர் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் உயிரிழந்தது தொடர்பாக பேசிய அவர், “தவறு இருந்தால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்றார்.
ஸ்மார்ட் மீட்டர் திட்டம்
ஸ்மார்ட் மீட்டர் திட்டம் குறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், இந்தத் திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழக அரசு யாருடன் பேசினாலும் அது வெளிப்படையாகவே இருக்கும் என்றும், மக்கள் நலனுக்காக மட்டுமே மத்திய அரசுடன் பேசப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆளுநர் அளிக்க உள்ள தேநீர் விருந்தில் பங்கேற்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.