AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ஜஸ்ட் மிஸ்… திமுகவினர் இதை போன ஆட்சியில் செய்திருக்க வேண்டும்!”.. அமைச்சர் ராஜ்மோகன் நறுக் பதில்!

மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த அமைச்சர், "கடந்த காலங்களில் (உதாரணமாக 2024-ல்) காவல் நிலையத்திற்குப் புகாரளிக்க வரும் பாதிக்கப்பட்ட பெற்றோர்களையே அடித்து கேஸ் போடும் அவல நிலை இருந்தது. அப்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 30 வழக்குகள் வரை பதிவாகின" என்று புள்ளிவிவரத்தைக் குறிப்பிட்டார்.

“ஜஸ்ட் மிஸ்… திமுகவினர் இதை போன ஆட்சியில் செய்திருக்க வேண்டும்!”.. அமைச்சர் ராஜ்மோகன் நறுக் பதில்!
அமைச்சர் ராஜ்மோகன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 18 Jun 2026 13:58 PM IST

சென்னை, ஜுன் 18: தமிழக புதிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் முடிந்த பிறகு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேட்ஜ் அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தது குறித்தும், சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். அதன்படி, “சட்டமன்றத்திற்கு என்று எப்போதும் ஒரு கண்ணியமும், மாண்பும் இருக்கிறது. ஜனநாயகம் என்பதே எதிர்க்கட்சிகள் தங்களுடைய எதிர்வினையையும், எதிர்ப்பையும் காட்டுவதற்கு இடம் தருவதுதான். அதுதான் ஜனநாயகத்தின் அழகும் கூட” என்று ஆரம்பித்தார்.

இதையும் படிக்க: “திமுக திட்டங்களுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் அரசு”.. தவெகவை கடுமையாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!!

கடந்த ஆட்சியில் காட்டியிருக்க வேண்டும்:

தொடர்ந்து திமுகவினரை சாடிய அவர், “ஆனால் ஒரு சிறிய ‘ஜஸ்ட் மிஸ்’. திமுகவினர் இந்த எதிர்ப்பை தங்களுடைய சொந்த ஆட்சிக் காலத்திலேயே (கடந்த திமுக ஆட்சியில்) காட்டியிருக்க வேண்டும். அவர்கள் கொஞ்சம் காலத்தாமதமாக புதிய அரசின் இந்த ஆட்சியில் கொண்டு வந்துவிட்டார்கள்” என்று குறிப்பிட்டார்.

தற்போதைய புதிய அரசு, பொது அமைதியையும், சட்டம்-ஒழுங்கையும், சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்டுவதற்காக ‘சிங்கப்பெண்கள் செருப்பு படை’ உள்ளிட்ட பல்வேறு அதிரடி விஷயங்களை முன்னெடுத்து வரும் ஒரு சர்க்கார் என்பதால், இந்த பேட்ஜ் மற்றும் எதிர்ப்புகள் அனைத்தும் கடந்த திமுக ஆட்சிக்கே பொருந்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன:

மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த அமைச்சர், “கடந்த காலங்களில் (உதாரணமாக 2024-ல்) காவல் நிலையத்திற்குப் புகாரளிக்க வரும் பாதிக்கப்பட்ட பெற்றோர்களையே அடித்து கேஸ் போடும் அவல நிலை இருந்தது. அப்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 30 வழக்குகள் வரை பதிவாகின” என்று புள்ளிவிவரத்தைக் குறிப்பிட்டார்.

ஆனால், தற்போதைய புதிய ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பெருமளவு குறைந்துள்ளன. அதோடு, காவல் நிலையங்களில் தங்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது என்ற நன்னம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் வந்து தைரியமாகப் புகாரளிப்பது அதிகரித்துள்ளது. தற்போதைய ஆட்சியில் எந்தவொரு குற்றம் நடந்தாலும், உடனடியாக எந்தவித பாராபட்சமும் இன்றி துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவதற்கான வேலைகள் துல்லியமாக நடந்து வருகின்றன என்றார்.

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த நிலைப்பாடு:

சமூக நீதி மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், புதிய அரசு அமைவதற்கு முன்பே தங்களின் தேர்தல் மேடைகளில் அறிவித்த கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தினார். “மாநில அரசு சார்பில் சாதிவாரி சமூக நீதி கணக்காய்வு நடத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. அன்று சொன்னதைத்தான் இன்றும் சொல்கிறோம். அப்போதுதான் சமூக நீதியின் பயன்கள் அடிமட்டம் வரை போய்சேர்ந்துள்ளதா என்பதைப் பார்க்க முடியும்” என்று கூறினார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களில் எந்தெந்த பிரிவினர் இன்னும் முன்னேறவில்லை, முதல் தலைமுறை பட்டதாரிகள் யார், பெண்கள் கல்வி நிலை என்ன போன்ற உண்மையான தரவுகள் இந்தக் கணக்காய்வின் மூலமே வெளிவரும்.

இதையும் படிக்க: சட்டம்-ஒழுங்கு முதல் மின்வெட்டு வரை அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..

கடந்த திமுக அரசு இதனைச் செய்யத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், “அவர்கள் மேடைகளில் மட்டுமே பேசினார்கள், சட்டமன்றத்தில் எதையும் செய்யவில்லை. ஆனால், நமது புதிய அரசு இதனை மிகக் கடுமையாகப் பின்பற்றப் போகிறது. சாதிவாரி கணக்காய்வை மாநில அரசு நடத்தும்; அதே நேரத்தில் முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்பதற்கான அழுத்தத்தையும் தொடர்ந்து கொடுப்போம்” என்று கூறினார்.

Follow Us