இபிஎஸ் முதுகில் குத்தியதாக நான் சொல்லவில்லை: பிரேமலதா விஜயகாந்த்!
AIADMK vs DMDK: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஒப்பந்தத்தை மீறி ஏமாற்றி விட்டதாகவும், முதுகில் குத்தி விட்டதாகவும் தெரிவித்ததாக தகவல் வெளியானது. ஆனால் தான் அப்படி சொல்லவில்லை என்றும், தவறான செய்திகள் வெளியிடுவதை நிறுத்த வேண்டும் எனவும் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

செங்கல்பட்டு, செப்டம்பர் 4: எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி விட்டதாக நான் சொல்லவில்லை என தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கும் நிலையில் மறுபக்கம் ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளுக்குள் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு நாடாளுமன்ற தேர்தல் ஒப்பந்தத்தின் போது ஒரு மாநிலங்களவை பதவி ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சமீபத்தில் அதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. இது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. மேலும் நம்பிக்கையின் பேரில்தான் தேர்தல் ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டோம். ஆனால் நாம் ஏமாந்து விட்டோம் என கடந்த வாரம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற தேமுதிக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா தெரிவித்ததாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: முதுகில் குத்திய எடப்பாடி பழனிசாமி.. வாக்குறுதி நிறைவேற்ற தவறிவிட்டார் – பிரேமலதா விஜயகாந்த்




இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசும் பொருளாக மாறிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி தொடருமா என்ற கேள்வியும் இழந்தது
நான் அப்படி சொல்லவே இல்லை
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற காஞ்சிபுரம் தேமுதிக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தேமுதிக சார்பில் நடைபெறும் என்னுடைய முதற்கட்ட சுற்றுப்பயணம் வெற்றிகரமாகவும், மக்கள் ஆதரவோடும் நடைபெற்றது.
மீண்டும் இரண்டாம் கட்ட பயணம் செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மக்கள் எங்கு சென்றாலும் மிக சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள் எனக் கூறினார். அப்போது கூட்டணி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நான் பலமுறை கூட்டணி குறித்து கூறிவிட்டேன். கடலூரில் ஜனவரி மாதம் நடைபெறும் மாநாட்டில் கூட்டணியை பற்றி அறிவிப்பேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆற்றில் வீசப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்.. அஸ்தியை கரைப்பது போல் கிடக்கிறது – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..
தொடர்ந்து நான் சொல்லாதது எல்லாம் செய்தியாக வருகிறது. அதனை நான் கண்டிக்கிறேன் என கூறினார். எடப்பாடி பழனிச்சாமி முதுகில் குத்தி விட்டார் என நான் சொல்லவில்லை. ஆனால் ஊடகங்களில் அது செய்தியாக வந்துள்ளது. இது முற்றிலும் தவறான செய்தியாகும். எங்கள் கட்சி நிர்வாகிகள் தங்களுக்குள் பேசுவதை நீங்கள் நான் பேசியதாக போடுவது மிகவும் கண்டனத்திற்குரியது. இப்படி சொல்லாததை சொல்வதாக நீங்கள் செய்தி வெளியிட்டால் இனி ஊடகங்களை நான் சந்திக்க மாட்டேன் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.