” தமிழருக்கு நடந்த துரோகம்.. நல்லாட்சி அமைய வேண்டும்” – மூப்பனார் நினைவு நாளில் நிர்மலா சீதாராமன் பேச்சு..
Nirmala Sitharaman: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனரான மூப்பனாரின் 24 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு நல்லாட்சி அமைய வேண்டு என குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 30, 2025: 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது என மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் மற்றும் காங்கிரஸின் மூத்த தலைவருமான மூப்பனாரின் 24-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
மூப்பனார் பிரதமராவதை தடுத்த சக்தியை மறக்க முடியாது – நிர்மலா சீதாராமன்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
“எளிமையும், நேர்மையும், தேசியமும் கலந்த ஒரு தேசியக் கட்சியின் தலைவராக இருந்தவர் மூப்பனார். அவருக்கு நாடு அளவில் மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஆளுமை மிக்க மூப்பனார் தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் பிரதமராக வேண்டிய சந்தர்ப்பம் உருவானது. ஆனால் பிரதமராக வேண்டிய நிலையில் அவருக்கு ஆதரவு தராமல் அதனை தடுத்தனர்.
அந்த சக்தி யார் என்பதை நமக்கு தெரியும். தமிழ் மற்றும் தமிழ் கலாச்சாரம் என்று பேசுபவர்கள், தமிழர் பிரதமராக வேண்டிய அந்த தருணத்தில் ஆதரவு தராமல் தடுத்தனர். இதை நிச்சயமாக நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒருபோதும் நம்மால் மறக்க முடியாது.
மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் இல்லை.. தமிழக அரசு அறிவிப்பு
மூப்பனாரின் கொள்கைக்கு ஏற்றது போல் நல்லாட்சி அமைய வேண்டும்:
தமிழகத்திற்கு நடந்த மிகப்பெரிய துரோகம் என்று நான் கருதுகிறேன். இங்கு அரசியல் பேச வரவில்லை, புகழஞ்சலி செலுத்தவே வந்துள்ளேன். இருப்பினும், ஒரு சிறிய அரசியலை பேசுகிறேன் என்பதை தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். அவரது கொள்கைக்கு ஏற்ற மாதிரி நல்லாட்சி அமைய நாம் எல்லோரும் முயற்சி செய்ய வேண்டிய தருணம்.
மேலும் படிக்க: மாறும் கூட்டணி கணக்கு? என்டிஏ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக… சுதீஷ் சொன்ன தகவல்!
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இதனை பூர்த்தி செய்ய நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். தமிழக மக்கள் நல்லாட்சி கேட்கிறார்கள்; அதை அவர்களுக்கு வழங்குவது நமது பொறுப்பு. போதைப்பொருளுக்கு எதிராக அனைவரும் ஒன்று திரண்டே நிற்க வேண்டும். சாராயம் தண்ணீரைப் போலவே பரவி வரும் நிலைமை உள்ளது. அதைத் தடுப்பதும், மக்களை காப்பதும் நமது பொறுப்பு. மக்களுக்கு சேவை செய்வது எப்போதும் நம் கடமையாகும்.
அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்:
இந்த கூட்டணி உறுதியுடனும் நல்ல முறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். முதிர்ச்சியும் பக்குவமும் கொண்ட தலைவர்கள் இருக்கின்றனர். நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் நல்லாட்சி அமையும். அதுவே மக்கள் தலைவர் மூப்பனாருக்கு அளிக்கக்கூடிய மிகப்பெரிய அஞ்சலையாகும்,” என தெரிவித்தார்.