பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் தீ விபத்து.. கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாப பலி!
College Students Died In Bike Accident | தர்மபுரியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் பெங்களூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டு இருந்த நிலையில், மற்றொரு பைக்குடன் நேருக்கு நேர் மோதி தீ விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.
தர்மபுரி, அக்டோபர் 27 : தர்மபுரியில் (Dharmapuri) பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்ப்வம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கல்லூரி மாணவர்கள் இருவரும் பெங்களூருவுக்கு (Bengaluru) சென்றுவிட்டு, பைக்கில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த நிலையில், இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், பைக் விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான பைக்குகள்
தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், எஸ்.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவருக்கு வயது 18. அதே பகுதியை சேர்ந்தவர் 21 வயதான திருச்செல்வன். இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தான், இருவரும் பைக்கில் பெங்களூரு வரை சென்று மீண்டும் பைக்கில் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
இதையும் படிங்க : நடிப்பு அரக்கன் அன்பில் மகேஷ் கைது.. இனி திமுகவுக்கு திக்.. திக்.. நிமிடங்கள் தான்.. தவெக காட்டமான விமர்சனம்!




இதேபோல திருவண்ணாமலை மாவட்டம், மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் சாரதி மற்றும் அவருடைய சகோதரர் வேலு. இவர்கள் பழைய செல்போன்கள், பட்டுப்புடவைகள் ஆகியவற்றை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் தான், தாங்கள் வாங்கிய பழைய பொருட்களை பெங்களூருவில் விற்பனை செய்வதற்காக அதிகாலையில் மோட்டார் சைக்கிள் எடுத்துக்கொண்டு பெங்களூரு புறப்பட்டுள்ளனர்.
தீ விபத்தில் சிக்கி 2 இளைஞர்கள் பரிதாப பலி
இந்த நிலையில் தான், பெங்களூரு – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பட்டி டோல்கேட் அருகே 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டுள்ளன. அப்போது இரண்டு வாகனங்களும் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளன. இந்த விபத்தில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்களான திருப்பதி, திருச்செல்வன் ஆகிய இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க : உள்ளாட்சி தேர்தலில் அதிகமான இளைஞர் களம் காண வேண்டும்.. வீ த லீடர்ஸ் அண்ணாமலை அழைப்பு!
மேலும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சாரதி, வேலு ஆகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.