தேனி சிறையில் இருந்து காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோட்டம்.. நள்ளிரவில் பயங்கரம்!!
17 Prisoners Escape from Theni District Jail: தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணை கைதிகள், காவலர்களைத் தாக்கிவிட்டு இரவோடு இரவாகத் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களைத் தேடும் பணியில் 17 தனிப்படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
தேனி, அக்.27: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிறைச்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வரும் சூழலில், கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் அவ்வப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணை கைதிகள் இரவு நேரத்தில் காவலர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் திட்டமிட்டு நடத்திய இந்த நாடகத்தனமான தப்பியோட்டச் சம்பவம் தேனி மாவட்டத்தையே உலுக்கியுள்ளதுடன், காவல்துறையினர் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் ரூ.24 கோடி தங்கம் லஞ்சம்.. அருண் ஐபிஎஸ் அதிகாரி மீது இறுகும் பிடி.. உயர்நீதிமன்றத்தில் பகீர் மனு!
வலிப்பு நாடகமாடி தப்பிய கைதிகள்:
தேனி மாவட்டச் சிறையின் ஒரே அறையில் மொத்தம் 17 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று இரவு திடீரென அந்த அறையில் இருந்த கைதிகளில் ஒருவருக்கு வலிப்பு வந்ததாகக் கூறி நாடகமாடி கூச்சலிட்டுள்ளனர். உடனே உதவிக்காக ஓடிவந்த சிறைக் காவலர்கள் தங்கபாண்டியன், மதன், ஸ்டாலின் பாபு மற்றும் பால்பாண்டி ஆகிய 4 பேர் மீது சமையலுக்குப் பயன்படுத்தப்படும் தட்டுகள் மற்றும் இரும்புப் பொருட்களைக் கொண்டு கைதிகள் திடீரெனத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த நான்கு காவலர்களும் உடனடியாக மீட்கப்பட்டுத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சந்தையைப் பயன்படுத்திக் கொண்ட கைதிகள், சிறையின் பிரதான வாசல் வழியாக மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளனர்.
தப்பிய கைதிகளில் ஒருவர் கைது:
சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடிய தகவல் கிடைத்ததும், தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி உடனடியாகச் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தேக்கம்பட்டி சிறைக்குள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தப்பியோடிய கைதிகளில் பிரவீன் என்பவர் சிறைக்குப் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதை மோப்ப நாய் மற்றும் காவல்துறை உதவியுடன் போலீசார் துரிதமாகச் செயல்பட்டுப் பிடித்தனர். பிடிபட்ட கைதியான பிரவீனைச் சிறைக்குள்ளேயே அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, அவர் மூலமாக மற்ற கைதிகள் எங்கு தப்பியோடினர் என்பது குறித்த முக்கியத் தகவல்களைத் திரட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க: கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் இருவர் உடல் கருகி பரிதாப இழப்பு..
17 தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டை:
தலைமறைவாகியுள்ள மற்ற 16 விசாரணை கைதிகளை உடனடியாகக் கைது செய்யும் பொருட்டு, தேனி மாவட்டக் காவல்துறை சார்பில் 17 தனிப்படைகள் தீவிரமாக அமைக்கப்பட்டுள்ளன. தேனி மாவட்டம் முழுவதும் மற்றும் இராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களின் கேரளா எல்லைப் பகுதிகளிலும் உள்ள சோதனைச் சாவடிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுத் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறைத்துறையின் பாதுகாப்பை மீறி கைதிகள் தப்பியோடிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பியோடிய அனைவரும் விரைவில் பிடிபடுவார்கள் எனக்காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.