Nagercoil: டேட்டிங் செயலி விபரீதம்.. நாகர்கோயில் இளைஞரிடம் மோசடி!
கன்னியாகுமரி மாவட்டத்தில் டேட்டிங் செயலியின் மூலம் ஒரு இளைஞர் தாக்கப்பட்டு, பணம் மற்றும் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வினு குமார் என்ற இளைஞர், டேட்டிங் செயலியில் பேசியவர்களை நேரில் சந்திக்கச் சென்றபோது, மூன்று நபர்களால் தாக்கப்பட்டு பணம், செல்போன் ஆகியவை பறிக்கப்பட்டது.

கன்னியாகுமரி, செப்டம்பர் 19: கன்னியாகுமரி மாவட்டத்தில் டேட்டிங் செயலி மூலம் இளைஞர் ஒருவரிடம் பணம் மற்றும் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலக அளவில் பல்வேறு விஷயங்கள் மாறிவிட்டது. அந்த வகையில் மனிதர்கள் தொடர்பு கொள்ள பல்வேறு வகையான சமூக வலைதளங்கள் தவிர்த்து செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளது. தனிமையை போக்க இத்தகைய செயலிகள் உதவும் என விளம்பரப்படுத்தப்பட்டாலும் இதனை தவறாக பயன்படுத்தும் கூட்டமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதன் மூலம் பண மோசடி தொடங்கி கொலை வரை சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. இப்படியான ஒரு சம்பவம் தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
டேட்டிங் செயலி மூலம் விபரீதம்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை பெருங்குழி என்ற பகுதியைச் சேர்ந்தவர் வினு குமார். 39 வயதான இவர் சிவில் இன்ஜினியராக உள்ளார். இதனிடையே வினு குமார் தனது செல்போனில் சமூக வலைதளப்பக்கம் மூலமாக டேட்டிங் செயலி ஒன்றை பார்த்து அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தியுள்ளார். அதனை கடந்த சில வாரங்களாக உபயோகித்து வந்த நிலையில் அந்த செயலி மூலம் சில நபர்கள் வினு குமாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
Also Read: சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது.. சிக்கிய சுந்தரி அக்கா மகன்.. சென்னை போலீஸ் அதிரடி!




நாம் ஒரே ஊர் என்பதால் சந்திக்கலாம் எனக் கூறி பள்ளியாடி அருகே இருக்கும் குழிக்கோடு என்ற பகுதிக்கு வரவழைத்தனர். அதன் பெயரில் வினு குமாரும் நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) மாலை அந்த இடத்திற்கு சென்றார். அப்போது அங்கு ஓரிடத்தில் மறைந்திருந்த மூன்று நபர்கள் வினு குமாரை வழி மறித்து தடுத்து நிறுத்தினர். மேலும் அவரிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டியதால் பயந்து போன அவர் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார்.
செல்போன், பணம் பறிப்பு
தொடர்ந்து வினு குமாரிடம் செல்போனை பறித்த அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கி பணம் கேட்டு மிரட்ட தொடங்கியது. ஆனால் தன்னிடம் ஆயிரம் ரூபாய் தான் இருக்கிறது என பயந்து போய் அவர் அதனை கொடுத்துவிட்டார். இதனை தொடர்ந்து அந்த நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த வினு குமார் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
Also Read: பகலில் யூடியூபில் போதனை வீடியோ.. இரவில் பலே திருடன்.. வசமாக சிக்கிய மோடிவேஷனல் ஸ்பீக்கர் !
மேலும் அங்குள்ள காவல் துறையினரிடம் தன்னை 3 நபர்கள் தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்ததாக புகார் செய்தார். அதன் பெயரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் வினு குமாரை டேட்டிங் செயின் மூலம் வரவழைத்து இந்த மோசடியை அரங்கேற்றியது தெரிய வந்தது. தொடர்ந்து பணம் மட்டும் செல்போனை பறித்தது பள்ளியாடியை சேர்ந்த சாலமன் பிரபு, வொண்டர்வின் மற்றும் இன்னொரு நபர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால் அவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில் போலீசார் வலைபேசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தக்கலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.