’திமுக பணத்தில் டீ கூட குடிச்சது இல்ல’ இபிஎஸ் குற்றச்சாட்டு கம்யூனிஸ்ட் பதில்!
Tamil Nadu Communist Party Replies to EPS : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பதில் கொடுத்துள்ளது. திமுகவின் பணத்தில் ஒரு சிங்கிள் டீ கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டன் குடிக்கவில்லை என பதில் கொடுத்துள்ளார். அதோடு, எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து முதிர்ச்சியான அரசியலை எதிர்பார்க்கிறோம் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை, ஜூலை 19 : கம்யூனிஸ்ட் கட்சிகள் (Commuinist Party) குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) கடுமையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் பதில் கொடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு (Assembly Election) இன்னும் 8 மாதங்களே உள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப் பயணத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மக்களை சந்தித்தும் வருகிறார். தொடர்ந்து, தனது சுற்றுப்பயணத்தின்போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அந்த வகையில், 2025 ஜூலை 18ஆம் தேதியான நேற்று டெல்டாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். அதாவது, “கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தனித்தன்மை இருந்தது. மக்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் கொடி பிடித்து பேராடக்கூடிய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இன்று, திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டன. நான் சொல்லக் கூடாது. சொல்ல வைக்கிறார்கள் இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள். என்றைக்கு கை நீட்டி திமுகவிடம் பணம் வாங்கினீர்களோ அன்றைக்கே கட்சி முடிந்துவிட்டது” என கூறினார்.




Also Read : திமுகவிற்கு அடிமைசாசனம் எழுதி கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சி – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..
இபிஎஸ் குற்றச்சாட்டு கம்யூனிஸ்ட் பதில்
“திமுக பணத்தில் ஒரு சிங்கிள் டீ கூட சிபிஎம் தொண்டன் குடிக்கவில்லை!” –
தோழர் பெ.சண்முகம்,
மாநில செயலாளர், சிபிஐ(எம்)#CPIM #CPIMTamilNadu #LeftPolitics #DMK #LeftUnity pic.twitter.com/3yzgiuYxgm— CPIM CHENNAI SOUTH (@cpimsouth) July 19, 2025
கம்யூனிஸ்ட் குறித்து எடப்பாடி பழனிசாமி வைத்த குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “திமுகவுடன் 2019ஆம் ஆண்டு தேர்தலில் தொகுதி உடன்பாடு செய்து போட்டியிட்டபோது, தேர்தல் செலவுக்கான திமுகவிடம் பணம் வாங்கப்பட்டது.
அதில் ஒரு சிங்கிள் டீ கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டன் குடிக்கவில்லை” என கூறினார். தொடர்ந்து, கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கூறுகையில், “எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் இருந்து முதிர்ச்சியான அரசியலை எதிர்பார்க்கிறோம்.
Also Read : அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திட்டவட்டமாக மறுத்த தவெக.. பின்னணி என்ன?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கரைந்துவிட்டது என கூறிவிட்டு, மற்றொரு பக்கம் எங்களுக்கு ரத்தின கம்பளம் விரிப்போம் என கூட்டணிக்கு அழைப்பு விடுகிறார். அதை நாங்கள் நிராகரித்துவிட்டோம். எடப்பாடி பழனிசாமி பாஜகவுடைய அரசியல் நிலைப்பாடுகளை ஆதரிக்கிறாரா என்பது முதலில் சொல்ல வேண்டும்” என கூறினார்.