கொலையில் முடிந்த கூல் லிப் சண்டை.. சைதாப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்!
Chennai Crime News: சென்னையில், புகையிலை பகிர்ந்து கொள்ள மறுத்ததால் 50 வயது நபர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நிகழ்ந்த இந்தக் கொடூரச் சம்பவத்தில், முகமது ரியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். CCTV காட்சிகள் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கைதான முகமது ரியாஸ்
சென்னை, செப்டம்பர் 18: சென்னையில் புகையிலை பகிர்ந்து கொள்ள மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் 50 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் புகையிலை பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் சட்ட விரோதமாக ஆங்காங்கே விற்பனை நடைபெற்று வருவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது வழக்கம். இந்த போதை பழக்கத்திற்கு சிறுவர்கள் தொடர்ச்சியாக அடிமையாகி வரும் நிலையில் குற்ற செயல்களிலும் ஈடுபடுவதால் இதனை முற்றிலும் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்படியான நிலையில் புகையிலை பொருளை பகிர மறுத்ததால் ஒரு கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காயத்துடன் கிடந்த நபர்
சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து மாம்பலம் ரயில்வே போலீசாருக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி இரவு தகவல் ஒன்று அளிக்கப்பட்டது. அதன்படி சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 15ஆம் தேதி அதிகாலையில் அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இது சந்தேக மரணம் என விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியானது. அதில் உயிரிழந்த நபரின் காயங்கள் ரயில் மோதியதால் ஏற்பட்ட காயங்களுடன் ஒத்துப் போகவில்லை என்றும், வேறு ஒரு நபரால் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: காதலியை மிரட்ட தற்கொலை செய்வதுபோல நடித்த இளைஞர் உயிரிழப்பு!
சிசிடிவி காட்சி மூலம் வெளிப்பட்ட உண்மை
இதனைத் தொடர்ந்து சைதாப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது உயிரிழந்த நபர் அங்கு ஒரு இளைஞரால் தாக்கப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த நபர் தியாகராய நகரை சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. மேலும் சிசிடிவி காட்சிகளை கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய நபர் கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது ரியாஸ் எனவும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் வாய்வழி புகையிலை பொருளான கூல் லிப் தர மறுத்ததால் அவரை தாக்கியதாக முகமது ரியாஸ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாஷிங் மெஷினால் தகராறு.. தலை துண்டிக்கப்பட்டு கொலை.. இந்தியருக்கு நேர்ந்த கொடூரம்!
கூல் லிப் தர மறுத்ததால் கொலை
அதாவது செப்டம்பர் 14ஆம் தேதி ஆன ஞாயிற்றுக்கிழமை இரவு முகமது ரியாஸ் சைதாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு மதுபோதையில் வந்துள்ளார். அப்போது அங்கு நடைமேடையில் ரமேஷ் அமர்ந்திருப்பதை கண்டார். அது மட்டுமல்லாமல் அவரது சட்டை பையில் கூல் லிப் பாக்கெட்டுகள் இருப்பதைக் கண்ட முகமது ரியாஸ், அவற்றில் சிலவற்றை தனக்கு தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ரமேஷ் மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த முகமது ரியாஸ் ரமேஷை தரையில் தள்ளி பலமுறை உதைத்து தாக்கியுள்ளார். இதில் அவர் மயக்கமடைந்த நிலையில் முகமது ரியாஸ் தப்பியோடி விட்டார். இதனை தொடர்ந்து முகம்மது ரியாஸை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.