பசை தடவி ஏடிஎம் மிஷினில் கொள்ளை.. ஓசூரில் சிக்கிய வடமாநில கும்பல்!
Krishnagiri ATM Theft: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் ஒன்றில் நூதன முறையில் பணம் திருடிய அரியானா கும்பல் கைது செய்யப்பட்டது. ஏடிஎம்மில் பசை பயன்படுத்தி பணம் திருடியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி, செப்டம்பர் 16: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் வங்கி ஏடிஎம் ஒன்றில் நூதன முறையில் பணத்தை திருடிய அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் ஏடிஎம்கள் திரும்பும் திசை எங்கும் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய ஏடிஎம் மையங்களில் வைக்கப்பட்டுள்ள மிஷின்களில் தொடர்ச்சியாக நூதன முறையில் பணம் திருடப்பட்டு வருவது அவ்வப்போது தொடர்கதையாகி வருகிறது. இதுதொடர்பாக வங்கி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டாலும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான முறையில் திருட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
பழுதான ஏடிஎம் இயந்திரம் – சிசிடிவி காட்சி
அங்குள்ள ஓசூர் நகரப் பகுதியில் தனியார் வங்கி ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் சமீபத்தில் பழுதான நிலையில் அதனை சரி செய்வதற்காக பராமரிப்பாளர்கள் வந்துள்ளனர். அப்போது ஏடிஎம்மில் இருந்த கேமராக்களை ஆய்வு செய்தபோது இரண்டு வாலிபர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பசையை தடவி நூதன முறையில் கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதனைக் கண்டு ஷாக்கான அவர்கள் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஓசூரை சுற்றியுள்ள அனைத்து வங்கிகளின் ஏடிஎம் மையங்களை பராமரிப்பவர்களுக்கும் வாட்ஸ்அப் செயலி மூலமாக அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: நகைக்கடையில் புர்கா அணிந்து வந்த பெண்.. கத்தியை காட்டி கொள்ளை முயற்சி.. சிக்கியது எப்படி? ..




சிக்கிய 3 பேர் கும்பல்
இப்படியான நிலையில் ஓசூரில் ஏரிக்கரை தெருவில் செயல்படும் ஒரு தனியார் வங்கி ஏடிஎம் மையத்தை முரளி என்பவர் கண்காணித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நேரத்தில் இரண்டு வாலிபர்கள் ஏடிஎம்மிற்குள் நுழைந்துள்ளனர். அவர்களின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இருவரின் முகச்சாயல் ஏற்கனவே ஏடிஎம் மையங்களில் பணத்தை கொள்ளையடித்த நபர்களின் முகத்துடன் ஒன்றி போவதை கண்ட முரளி சந்தேகமடைந்தார்.
பின்னர் ஏற்கனவே அனுப்பப்பட்ட சிசிடிவி காட்சிகளைக் கொண்டு இரு நபர்களும் ஏடிஎம் கொள்ளையர்கள் என்பதை உறுதி செய்தார். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற அவர் ஏடிஎம் ஷட்டரை வெளியே பூட்டிவிட்டு ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த ஏடிஎம் மையத்திற்கு உள்ளே இருந்த இரண்டு கொள்ளையர்களையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
இதையும் படிங்க: பயணிகளே உஷார்.. ஆம்னி பேருந்தில் 43 சவரன் நகை திருட்டு.. டீ குடிக்க இறங்கியபோது சம்பவம்!
இதில் அவர்கள் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தாஹிர், முகமது சாத் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களுக்கு உதவிய ஹசம் என்ற வாலிபரும் சிக்கினார். இவர்கள் வட மாநிலங்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்களில் வரக்கூடியவர்களாக இருந்தனர். மேலும் அங்குள்ள ஏடிஎம் மையங்களில் நோட்டமிட்டு பணத்தை கொள்ளையடித்ததும் தெரிய வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.