Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழ்நாடு பள்ளிகள் அருகே புகையிலை விற்க தடை: உலக புகையிலை ஒழிப்பு தின நடவடிக்கை

School Tobacco Ban in Tamil Nadu: தமிழ்நாட்டில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, பள்ளிகள் சுற்றுப்புறங்களில் 300 அடி தூரத்திற்குள் புகையிலை விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் சுற்றி சிவப்பு கோடு வரையப்பட்டு, "புகையில்லா பகுதி" எனப் பதாகை வைக்க வேண்டும்.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிகள் அருகே புகையிலை விற்க தடை: உலக புகையிலை ஒழிப்பு தின நடவடிக்கை
பள்ளி அருகே புகையிலை விற்பனைக்கு தடைImage Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 31 May 2025 10:01 AM

தமிழ்நாடு மே 31: உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி(World No Tobacco Day), 2025 மே 31 அன்று பள்ளி சுற்றுப்பகுதியில் புகையிலைப் பொருட்கள் விற்பனையைத் தடை செய்ய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளைச் சுற்றி 300 அடி வரை சிவப்பு கோடு வரைந்து, “புகையில்லா பகுதி” என பதாகை வைக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறினால், தேசிய உதவி மைய எண்ணில் (1800112356) புகார் அளிக்கலாம். அனைத்து வகை பள்ளிகளும் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல் பட வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இது உறுதிசெய்ய வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே பள்ளி அருகே புகையிலை விற்பனை தடுக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

பள்ளி அருகே புகையிலை விற்பனைக்கு தடை – கல்வித்துறை உத்தரவு

உலக புகையிலை ஒழிப்பு தினமான மே 31 (சனிக்கிழமை) முன்னிட்டு, பள்ளிகள் சுற்றுப்புறங்களில் புகையிலை மற்றும் அதனை சார்ந்த பொருள்கள் விற்பனைக்கு தடை செய்துள்ளதை உறுதி செய்ய கல்வித் துறை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “மாணவர்கள் புகையிலை பழக்கத்திலிருந்து விலக இருக்க வேண்டும் என்பதற்காக, பள்ளிகளைச் சுற்றியுள்ள 300 அடி வரம்பிற்குள் புகையிலை மற்றும் அதனை சார்ந்த பொருட்களின் விற்பனையைத் தடை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவப்பு கோடு மற்றும் பதாகை கட்டாயம்

இத்தடை அமலாக்கத்துக்காக, பள்ளியின் சுற்றுச் சுவர் முதல் 300 அடி தூரம் வரை சிவப்புற நிற கோடு வரைய வேண்டும். மேலும், “புகையில்லா பகுதி” எனும் பதாகை தெளிவாக நிறுவப்பட வேண்டும். இந்த விதிமுறைகளை மீறுபவர்களிடம் இருந்து புகார்களை பெற்றுக்கொள்ள, தேசிய உதவி மைய எண்ணான 1800112356-ல் தொடர்பு கொள்ளலாம்.

புகையிலை விழிப்புணர்வு வினாடி வினா

தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

பள்ளிகள் வகைப்பட்டிருந்தாலும், அனைத்துவிதமான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தங்கள் பள்ளி வளாகங்களை புகையில்லா கல்வி நிறுவனங்களாக மாற்றும் பணியில் சீரான கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இதை உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் உத்தரவு – அரசு நடவடிக்கைகள்

இதற்கு முன்னதாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, மாணவர்கள் போதைப் பொருட்களின் அடிமையாகாமல் இருக்கக் காவல்துறை மற்றும் மத்திய அரசுக்கு பல்வேறு உத்தரவை பிறப்பித்தது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குட்கா, கூல் லிப் போன்ற பொருட்களின் விற்பனை தடை செய்யப்பட வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை பின்பற்றி, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, பள்ளி மற்றும் கல்லூரி சுற்றுவட்டாரங்களில் புகையிலைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.